Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 27, 2019

மகளிர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத விவகாரம்: சென்னைப் பல்கலை. துணைவேந்தருக்கு நோட்டீஸ்


சென்னைப் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாத விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


சேப்பாக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவிகள் தங்கிப் படிக்கும் அன்னை தெரசா மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் கழிவறை, குளியல் அறை ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படாமலும், உணவு, குடிநீர் ஆகியவை சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும் பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது.


தாமாக முன்வந்து வழக்கு: இதன் அடிப்படையில், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர், உயர்கல்வி துறை முதன்மைச் செயலர், அன்னை தெரசா மகளிர் விடுதியின் காப்பாளர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.