




பேராசிரியர் கி. பார்த்திபராஜா பேச்சு
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி 4, திங்கள்கிழமை அன்று தவத்திரு தனிநாயகம் அடிகள் அறக்கட்டளைச் சொற்பொழிவினை , திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள் ‘தமிழ் நாடக மரபில் பெண்கள்’ எனும் பொருண்மையில் நிகழ்த்தினார். பெண்கள் நாடகத்தில் நடிப்பது என்பது ஒரு காலத்தில் இழிவாகவே பார்க்கப்பட்டது. சகபெண்களே நாடகக்காரி என்றும், நடத்தை சரியில்லாதவள் என்று கூறும் மனநிலை தமிழ்ச் சமுகத்தில் நிலவி வந்தது. இதனால், பெண்கள் இத்துறையில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆண்களே பெண் வேடமிட்டு நாடகங்களில் நடிக்ககூடிய நிலை இருந்தது. அதையும் தாண்டி பெண்கள் இத்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் தடம் பதித்துள்ளனர்.
நாடகத் தந்தை சங்கரதாஸ்சாமிகளின் காலகட்டத்தில் நாடகத்துறையில் தடம் பதித்தப் பெண்களும் உணடு. குறிப்பாக திருமதி ஜெயலதா, சித்ரா தேவி, ஜான்சிராணி போன்றோர்களைக் குறிப்பிடலாம். தற்போது நாவீன நாடகங்களிலும் இசை நாடகங்களிலும் பெண்களின் பங்களிப்பு மகத்தானது என்று தமது பொழிவில் எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை வகித்தார்.அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்புச் செய்தார்.பேரா. கோ.பழனி, திருமதி கி. ஜகதா , நிறுவன ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.