Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 27, 2019

சட்டப் பல்கலை.யில் பேராசிரியர் நியமனம்: தடை!



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



2008ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார் குணநிதி. இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டு வழக்கறிஞருக்கான தேசியத் தகுதித் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், திருச்சி சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகச் சேர்ந்தார்.



2014ஆம் ஆண்டு சட்டப் பல்கலைக்கழகம் ஓர் அறிவிப்பாணையைப் பிறப்பித்தது. இதன்படி 50 விரிவுரையாளர் பணிகளுக்குச் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் பழங்குடியினத்தவருக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 186 உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. கடந்த மூன்று முறையாகச் சட்டப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.



இதனைக் குறிப்பிட்டு, “பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பாணையின்படி சட்டப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணி தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குணநிதி.



நேற்று (பிப்ரவரி 26) இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஜெயப்பிரகாசம் ஆஜரானார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, வரும் 5ஆம் தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.