ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 9 நாட்களாக பல அரசுப் பள்ளிகள் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் பல பள்ளிகளில் சரியாக நடைபெறவில்லை. இதனை ஈடுசெய்யும் வகையில்,
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவைக்கு ஏற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சிறப்பு வகுப்புகளுக்கான நேரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.


