Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: 181 காலி பணியிடங்களுக்கு: 2.29 லட்சம் பேர் போட்டி



சென்னை: துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடந்தது. 181 காலி பணியிடங்களுக்கு 2.29 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 பதவி அடங்கிய துணை கலெக்டர் 27, டிஎஸ்பி 90, வணிகவரித்துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 13, மாவட்ட பதிவாளர் 7, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 8, மாவட்ட தீயணைப்பு அலுவலர் 3 ஆகிய 181 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தது. இந்த தேர்வு எழுத சுமார் 2,30,588 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்து கிடைக்கும் என்பதால், இந்த அளவுக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், சரியாக விண்ணப்பத்தை சமர்பிக்காத 1,150 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதில், ஆண்கள் 1,21,887 பேரும், பெண்கள் 107,540 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பட்டது. இவர்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 773 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.



இந்த தேர்வை கண்காணிக்க 773 முதன்மை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உட்பட 156 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணிவரை நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு நடக்கும் என்றாலும், தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கு தேர்வர்கள் மையத்திற்கு வெளியே வந்து காத்திருந்தனர்.

அவர்கள் கடும் சோதனைக்கு பிறகு, காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுவோர் தவிர மற்ற யாரும் மையங்க`ளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறும் மையங்களில் காட்சிகள் வீடியோ மூலம் பதிவு ெசய்யப்பட்டது. பதட்டமான தேர்வு மையங்களில் வெப் கேமரா மூலம் சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டது.

தேர்வு முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில், தேர்ச்சி பெறுவோர் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும்.