Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிக எளிமை: மாணவ, மாணவிகள் உற்சாகம்



பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.


இந்தத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிப் பாடங்களுக்கு மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
முதல் தேர்வான தமிழ் முதல் தாள் வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னை முகப்பேர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கே.சுகந்தி, ஆர்.ஜனனி, பி.அரவிந்த் உள்ளிட்டோர் கூறியது: தமிழ் முதல் தாள் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் கேள்விகள் பயிற்சிப் பட்டியலில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.

2 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடங்களில் இருந்து அல்லாமல் சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது. நெடுவினா மற்றும் பாடலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன.
பருவத் தேர்வுகளில் இடம்பெற்ற சில வினாக்கள் பொதுத்தேர்விலும் இடம்பெற்றிருந்தன. வழக்கம்போல் இல்லாமல் இந்தமுறை பிற்பகலில் தேர்வு நடைபெற்றதால் காலையிலிருந்து தேர்வுக்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். 100-க்கு 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.


இதையடுத்து வரும் திங்கள்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து மார்ச் 20-ஆம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22-இல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 23-இல் விருப்பப் பாடம், 25-ஆம் தேதி கணிதம், 27-ஆம் தேதி அறிவியல், 29-இல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளன.


தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த, 9.59 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகள், 38 ஆயிரம் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9.97 லட்சம் பேர் பங்கேற்றனர்.