Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

தரமாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 1 வினாத்தாள்: கணிதம், விலங்கியல், வணிகவியலில், 'சென்டம்' கிடைக்காது


பிளஸ் 1 கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இடம் பெற்றதால், தேர்வெழுதிய மாணவர்கள் திணறினர்.


பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. மூன்று பாடங்களிலும், எதிர்பார்ப்புக்கு மாறான புதிய கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றன. புதிய முறை வினாத்தாளுக்கு விடை அளிக்க, மாணவர்கள் திணறினர்.

வணிகவியல் வினாத்தாள் குறித்து, சென்னை சவுகார்பேட்டை, எம்.பி.யு.,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், ஆர்.ஆனந்தன் கூறுகையில், ''மாணவர்களின் தேர்ச்சிக்கு பிரச்னை இருக்காது. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதியில், தலா, ஒரு கேள்வி கடினமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகள் முழுவதும் எளிதாக இருந்தன,'' என்றார்.



சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர், பழனி கூறுகையில், ''30 மற்றும் 40ம் எண் கேள்விகள் கடினமாக இருந்தன. 85 சதவீத கேள்விகள், பாடத்தின் பின் பக்கத்தில் உள்ளவை. 33 பாடங்களில், மூன்று பாடங்களில் கேள்விகளே இடம் பெறவில்லை. சராசரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது சிரமம்,'' என்றார்.



விலங்கியல் பாடம் குறித்து, எம்.சி.டி.எம்., பள்ளி ஆசிரியர், இளங்கோ கூறியதாவது:பிளஸ் 1 புதிய பாட திட்டத்தை நிரூபிக்கும் வகையில்,அனைத்து கேள்விகளும் புதிதாக இருந்தன. சராசரி மாணவர்கள் சிலர்,விலங்கியல் பாட பிரிவின் மீது கவலை ஏற்படும் வகையில், கொஞ்சம் கடினமான கேள்விகள் இடம் பெற்றன.



பாடத்தின் பின்பக்க கேள்விகள் மிக குறைவு. சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையிலான, மிகவும் தரமான வினாத்தாள்.ஆனால், இந்த வினாத்தாளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், இன்னும் அதிகமாக தயாராக வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கணித தேர்வு குறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர், சந்திரசேகர் கூறுகையில், ''வினாத்தாள் தரமாக இருந்தது. மாணவர்களின் தேர்ச்சிக்கு பிரச்னை இல்லை. அதிக மதிப்பெண் பெறுவது கடினம்,'' என்றார்