Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்



பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் தயார் நிலையில் இருக்கிறது. இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
தேர்வு காலங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வை சந்திப்பதற்கும், அந்த நேரங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் 1-ந் தேதி ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


கடந்த ஆண்டு பொதுத்தேர்வின் போது இந்த எண்ணுக்கு ஏராளமான மாணவர்கள் தொடர்பு கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொண்டனர். இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குழப்பங்களை சரிசெய்வதற்காக இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்து இருக்கிறது.


இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் பிரத்தியேகமாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இலவச தொலைபேசி எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு பேசி பொதுத்தேர்வு தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ‘ஷிப்ட்’ அடிப்படையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஒவ்வொரு தேர்வுக்கும் முந்தைய நாள் அந்த பாடப்பிரிவு தொடர்பான சந்தேகங்கள் இருந்தாலும், மாணவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.


அதற்காக மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு வசதியாக 4 ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்கள் மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு ஆலோசனையும், பதிலும் வழங்குவார்கள்.