Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 9, 2019

வரும் கல்வியாண்டிலிருந்து 3, 4, 5, 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்



தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் கல்வியாண்டிலேயே (2019-2020) அதை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை:
2018-19-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கும், 2019-2020- ஆம் கல்வியாண்டில் 2, 7, 10, 12 வகுப்புகளுக்கும், 2020-2021- ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.


அதன்படி 2018-2019 கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து 2, 7, 10, 12 வகுப்புகளுக்கான பாடநூல் தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. இதையடுத்து 2020-2021- ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான முதல் பருவத்துக்கான பாடநூல்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும்.


தற்போது அந்த வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு வடிவமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து முதல் பருவம் முடிந்து ஒரு மாதத்துக்குள் இரண்டாம் பருவப் பாடங்களுக்கான குறுந்தகடுகளும் தயாரிக்க இயலும்.
எனவே 2020-2021-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்குரிய பாடநூல்களை வரும் கல்வியாண்டிலேயே (2019-2020) நடைமுறைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 3, 4, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்து பாடப்புத்தகங்களை 2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.


அனைத்து வகுப்புகளுக்கும்... இதன் மூலம் வரும் கல்வியாண்டிலேயே ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.