Search This Blog

Wednesday, March 27, 2019

எம்பிஏ படிப்பில் புதிய பிரிவு: ஏஐசிடிஇ ஒப்புதல்

0 comments
எம்பிஏ பட்டப் படிப்பில் புதிய வகையான பிரிவை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் அதன் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் மாணவர்கள் அந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எம்பிஏ - இன்னோவேஷன், வென்ட்சர் டெவலப்மெண்ட், என்டர்பிரனர்ஷிப் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படிப்பை வரும் கல்வியாண்டில் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நாடு முழுவதும் 15 கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் சென்னையைச் சேர்ந்த இரு கல்லூரிகளும் அடங்கும்.
அதற்கு தற்போது ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் முனைவோர் எம்பிஏ படிப்புக்கான பாடத் திட்டமானது பல்வேறு நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக மும்பை மற்றும் ஆமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலின்படி அப்பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


பருவமொன்றுக்கு ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை அப்படிப்புக்கு அக்கட்டணமாக வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த புதிய வகை படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.