Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 12, 2019

சி.பி.எஸ்.இ., தேர்வு முறையில் மாற்றம் வரும் கல்வி ஆண்டில் அமலாகிறது


வரும் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், தேர்வு முறைகளில், அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன.


அதன்படி, வரும் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதிப்பீட்டு முறையில் மாற்றம் அமலுக்கு வருவதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய அளவிலான கல்வி மதிப்பீட்டு கணக்கெடுப்பில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள், தேசிய அளவிலான சராசரி மதிப்பீட்டை விட, அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த கணக்கெடுப்பில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில், 50 சதவீதத்துக்கு அதிகமாக, மதிப்பெண் பெற்று உள்ளனர்.


இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, அக மதிப்பீட்டு முறையில், புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதன்படி, அகமதிப்பீட்டு மதிப்பெண்களில், இதுவரை இருந்த செய்முறை எழுத்து தேர்வுடன், மாணவர்களிடம், வினாடி - வினா மற்றும் நேர்முக கேள்வி, பதில் போன்ற அம்சங்கள் அடிப்படையில், மதிப்பெண் பிரித்து வழங்கப்படும்.

வினாத்தாளில், சரியான விடையை தேர்வு செய்யும் பகுதியில், 20 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.மேலும், கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 60 மதிப்பெண்களுக்கு குறைந்த கேள்விகள் இடம் பெறும். ஆனால், கேள்விகளுக்கான பதில்களை விரிவாக, சிந்தித்து எழுதினால் மட்டுமே, முழு மதிப்பெண் கிடைக்கும்.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கணிதம், அரசியல் அறிவியல் மற்றும் சட்டப்படிப்பு போன்றவற்றுக்கு, 80 மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் இடம் பெறும்.


எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு குறைவான எழுத்து தேர்வுக்கு, இரண்டு மணி நேரமும், மற்றவர்களுக்கு, மூன்று மணி நேரமும் ஒதுக்கப்படும். சரியான விடையை தேர்வு செய்யும் கேள்விகள், 25 சதவீதம் இடம் பெறும்; 75 சதவீத கேள்விகளுக்கு, விரிவான விடை அளிக்க வேண்டும். இந்த பகுதியில், கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்; அதற்கு, மாணவர்கள் விரிவான பதில்களை எழுத வேண்டும்.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.