Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 5, 2019

மோட்டார் வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர்: உத்தரவு!



அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் மொத்தம் 286 நெடுஞ்சாலைகள், 5,006.14 கிலோமீட்டர் நீளத்தில் உள்ளன. நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள், அதிகளவில் ஒளி தரக்கூடிய பிரகாசமான ஹெட் லைட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்களை இயக்குவோருக்கு கண் கூசுவதால் விபத்து ஏற்படுவதாகவும், முந்தி செல்ல முயல்வதோ, அல்லது எதிரில் வரும் வாகனத்தின் தூரத்தைத் தெரிந்து கொள்வதோ சிரமமாக இருக்கிறது.



இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடக்கக் கூடிய விபத்துகள் பெரும்பாலும் ஹெட்லைட்டுகளால் ஏற்படுகின்றன. முகப்பு விளக்குகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், எதிர்த் திசை ஒட்டுநர்களுக்குச் சிரமம் ஏற்படாது” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று (மார்ச் 4) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இரண்டு வாரத்தில் மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



ஸ்டிக்கர் ஒட்ட தவறும் வாகன உரிமையாளர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாமே என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.