
மாணவர்களின் அலைக்கழிப்பை தவிர்க்க தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் ஆன்லைன் வழியில் ஜாதி, இருப்பிட, வருமான சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிந்து, மாணவர்கள் கல்லுாரிக்கு விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர். கல்லுாரி விண்ணப்பங்களுடன், ஜாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்கள் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
புதுச்சேரியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலே, வருவாய்த்துறை மூலம் ஒருங்கிணைந்த சான்றிதழ் (பிக்) அளிக்கப்படுகிறது.
இந்த சான்றிதழை பிளஸ் 2 தேர்வுக்கு பிறகு, வருவாய்த்துறைக்கு சென்று மாணவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். புதிதாக சான்றிதழ் பெறுவோரும் தற்போது விண்ணப்பித்து சான்றிதழ் பெறும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வருவாய்த்துறையினர் சான்றிதழ் வழங்கும் பணியில் படு பிசியாக உள்ளனர். சில இடங்களில் போதிய ஆட்கள் இல்லாததால் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமும் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற பல நாட்கள் வருவாய்த்துறைக்கு அலைய வேண்டி உள்ளது.தமிழகத்தில் பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு வராமல், பொது சேவை மையம் மூலம் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால், ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது எளிதாகவும், நம்பகத் தன்மையுடனும் உள்ளது.தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் ஆன்லைன் வழியாக சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்களை கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் வசதியுடன் கூடிய லேப்டாப் வழங்கினால் ஆன்லைன் வழியாக சான்றிதழ் வழங்கும் பணியை துவக்கிட முடியும். ஆனால் கம்ப்யூட்டர் வாங்க போதிய நிதி இல்லாததால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் 81 வருவாய் கிராமங்கள் உட்பட மாநிலத்தில் 120 வருவாய் கிராமங்கள் உள்ளது. இங்கு பணியாற்றும் வி.ஏ.ஒ.க்களுக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்தாலே, ஆன்லைன் வழி சான்றிதழ் வழங்கும் பணியை துவக்கி விடலாம். பொதுமக்களின் அலைச்சலையும் குறைக்க முடியும்.பயன்கள்:ஆன்லைன் வழியாக சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அதன் உண்மை தன்மையை எளிதாக கண்டறிய முடியும். பொதுசேவை மையத்தில் விண்ணப்பித்தால், சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பயனாளிகளின் மொபைல்போனுக்கு வந்துவிடும்.
வருவாய்த்துறை அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை. கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும்போது, சென்டாக் வருவாய்த்துறை வழங்கிய சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை வரவழைத்து அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து, சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய்கிறது. ஆன்லைன் வழியில் சான்றிதழ் வழங்கப்பட்டால், இந்த ஆய்வு பணி தேவை இருக்காது. சான்றிதழ் எண்ணை பதிவு செய்தாலே, அதன் உண்மை தன்மையை சேர்க்கை நடத்தும் சென்டாக் தெரிந்து கொள்ள முடியும்.ஒரு முறை ஆன்லைன் வழி சான்றிதழ் பெற்றுவிட்டால், அடுத்த முறை புதுப்பிக்க வருவாய்த்துறைக்கு அலைய வேண்டி யதில்லை. அடுத்தடுத்த முறை பொதுசேவை மையத்தின் மூலமே சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் சான்றிதழ் பெற பொதுமக்கள், மாணவர்கள் வருவாய்த்துறைக்கு அலைகின்றனர். எனவே, வரும் காலங்களில் ஆன்லைன் வழியில் சான்றிதழ் வழங்க சிறிய அளவிலான தொகையை ஒதுக்கி வருவாய்த்துறையில், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மாணவர்கள், பெற்றோர்களின் அலைச்சலை குறைக்க முடியும். வருவாய்த்துறை அதிகாரிகளும், சென்டாக்கிற்கு சென்று 20 நாட்கள் தங்கி, வருவாய்த்துறை கொடுத்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டிய அவசியம் தேவை இருக்காது.





