Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 11, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆறு பாடங்கள் இருக்கும்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்


தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கும் முறை அமலாகும் என வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் மேல்நிலைக் கல்வியில் வழக்கம்போல் ஆறு பாடங்கள் இருக்கும் என்றும், பாடங்களைக் குறைப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக தேர்வு செய்தால் போதும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், மேலும் மேல்நிலை வகுப்புகளில் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன.


அதே போன்று 9,10-ஆம் வகுப்புகளுக்கான மொழிப் பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இருப்பதை மாற்றி இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தகவலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த விளக்கம்: வரும் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வழக்கம்போல் ஆறு பாடங்கள் இருக்கும். பாடங்களைக் குறைப்பது குறித்து எந்த விதமான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை, இது தொடர்பாக முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற தவறான தகவல் பரப்பப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். எனவே மாணவர்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேபோன்று பத்தாம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்கள் என தற்போதுள்ள நிலையே தொடரும் என்றார்.