Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 1, 2019

10-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 21,769 மாணவர்கள்: காரணத்தைக் கண்டறிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 21,769 மாணவர்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளிகளில் 2018-2019 கல்வியாண்டில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 ஆகும்.

ஆனால், தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 849 தான். அப்படி பார்த்தால் 21, 769 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைநிற்றல், இடம் மாறிச்சென்றவர்கள் என சராசரியாக சுமார் 5,000 மாணவர்கள் என எடுத்துக் கொண்டாலும் மீதமுள்ள 16,769 மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுப்பது யார்? மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம்.


100 சதவீதம் தேர்ச்சிக்காக தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடப்படுகிறதா அல்லது அதிகாரிகள் 100 சதவீதம் தேர்ச்சியை வலியுறுத்துவதால் மாணவர்கள் வலுக்கட்டாயமாக இடையில் நிறுத்தப்படுகிறார்களா? இது அரசுப்பள்ளிகளிலும் தொடருகிறதா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை விரிவான ஆய்வு நடத்திட வேண்டும். ஆண்டுதோறும் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.