Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 9, 2019

7வது சம்பளக்குழு - இடைநிலை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை ஊதியமாக, ரூ.8,370 ஆக இருந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால், கடந்த 2009, 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வந்தனர். ஆனால், அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனிடையே, 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், போராட்டத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர்கள், இந்த 7வது ஊதியக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர்.

ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைத்த நீதிமன்றம், பழைய சம்பளத்தில் தொடர்வதுடன், விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நேரத்தில் புதிய ஊதிய உயர்வையும் பெற்றுக் கொள்ளலாம் என பரிந்துரைத்தது. ஒருநபர் குழு அமைத்து ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையிலும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலகங்களில் கடிதம் அளித்து, புதிய ஊதியத்தை பெற்று வருகின்றனர். இதனிடையே, சேலம் மாவட்டத்தில் மனு அளித்தும், புதிய ஊதிய உயர்வு வழங்காமல், 6 மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருநபர் குழு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாததால், நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகிறது. எனவே, நீதிமன்றம் வழிகாட்டியபடி, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி, ஊதிய உயர்வு வழங்க கோரியுள்ளோம். சேலம் மாவட்டத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இவர்களில் பலர், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே மனு கொடுத்தவர்கள். அன்று முதல் இன்று வரை, ஊதிய உயர்வு கேட்டு அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர். வேண்டுமென்றே 6 மாதத்திற்கு மேலாக இழுத்தடித்து வருகின்றனர். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல், மனு அளித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும், உடனடியாக ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட பிஇஓக்கள் மீது,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கண்துடைப்புக்காக குறைதீர் கூட்டம்

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள்,அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் தங்களது உயர்கல்விக்கான முன்அனுமதி,பணிப்பதிவேடு, ஊதிய உயர்வு,பணப்பலன்கள்,நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இவற்றின் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சேலம் மாவட்டத்தில் குறைதீர் கூட்ட மனுக்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.