Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

8,462 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தாமதம்

தமிழகத்தில் கடந்த 2011-12ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், ஊதியம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2011-12ம் ஆண்டு புதிதாக ஆசிரியர் பணிநியமனத்திற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, மேல்நிலைப்பள்ளிகளில் 1,598 முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆர்எம்எஸ்ஏ மூலம் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான பணிநீட்டிப்பு ஆணை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஆணையில், மார்ச் மாதம் வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் பணிநீட்டிப்பு தொடர்பான ஆணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், மே மாதம் பிறந்து ஒருவாரம் கடந்தும், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், பணிநீட்டிப்பு ஆணை வராமல் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டனர். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை நாடினால், இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் கூறுகின்றனர். வழக்கமாக, ஒரு பணிநீட்டிப்பு காலம் முடிவதற்கு, ஒரு மாதத்திற்கு முன்பே புதிய ஆணை வெளியிடப்பட்டுவிடும். ஆனால், தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகியும், புதிய ஆணை வரவில்லை.

இதனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர். கடனுக்கான தவணை செலுத்த முடியாத நிலையில், கால தாமதத்திற்கான அபராதமும் எங்கள் தலையில் கூடுதல் சுமையாக விழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, உடனடியாக பணிநீட்டிப்பு ஆணையை வெளியிடுவதுடன், அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளமும் வழங்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.