Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

பாவினம்

பாவினம்


நால்வகைப் பாக்களில் நெகிழ்ச்சி பெற்ற வடிவங்களே பாவினங்களாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்குவகைப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்ற மூன்று இனங்கள் அமைகின்றன. இவை, பாக்களின் இலக்கணங்களை முழுமையாகப் பெறாமல், அவற்றின் அடியளவு மற்றும் சீர் அளவை மட்டும் ஏற்று அமைவனவாக உள்ளன. தளை வரையறை இல்லை. இப்பாவினங்களின் அனைத்து அடிகளும் ஒரே எதுகைப் பெற்று அமைதல் வேண்டும்.



பாவினங்களின் பொதுப் பண்புகள்



நால்வகைப் பாக்களுக்கு இனங்களாக அமையும், தாழிசை, துறை, விருத்தம் என்ற மூன்று இனங்களுக்கும் சில பொதுப்பண்புகள் காணப்படுகின்றன.



தாழிசையின் பொதுப்பண்புகள்



பாவினங்களில் அனைத்துவகைச் சீர்களும் தளைகளும் விரவி வரும் பாக்களைப் போன்று வரையறை இல்லை.



தாழம்பட்ட(தாழ்ந்த) ஓசையுடையதாய் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவது தாழிசையின் இயல்பாகும்.



துறையின் பொதுப்பண்புகள்



இரண்டடி முதல் ஏழடி வரை அமைந்து, அடிகளில் சீர்கள் மிக்கும் குறைந்தும், அடிகள் நீண்டும் குறுகியும் இடைமடக்காயும் அமைவது துறையின் இயல்பாகும்.



விருத்தத்தின் பொதுப்பண்புகள்



அளவு ஒத்த அடிகளால் அமைவது விருத்தத்தின் இயல்பாகும்.



பாவினங்களின் வகைகள்



நான்கு பாக்களோடு மூன்று இனங்கள் உறழ பாவினங்கள் பன்னிரண்டு வகைப்படும். இவற்றோடு குறள் வெண்பாவின் இனமான துறை, தாழிசை ஆகிய இரண்டையும் சேர்த்து பாவினங்கள் பதினான்காக வகைப்படுத்தப்படுகின்றன.



வெண்பா இனங்கள்



வெண்பாவின் இனங்களாக வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்ற மூன்று அமைகின்றன. இவை மட்டுமல்லாமல் ஏனையப் பாக்களுக்கு இல்லாத சிறப்பு வெண்பாவிற்கு உண்டு. என்னவெனின், வெண்பாவின் வகையான குறள் வெண்பாவிற்கும் துறை, தாழிசை என்ற இரண்டு இனங்கள் சுட்டப்படுகின்றன. ஆக வெண்பாவின் இனங்களாக ஐந்து அமைகின்றன.



குறள்வெண்பா இனம்



குறள் வெண்பாவின் துறையை, குறள்வெண்செந்துறை என்றும் தாழிசையை குறட்டாழிசை என்றும் வகைப்படுத்துகின்றனர்.



குறள் வெண்பா இரண்டடி உடையது என்பதால் அதன் இனத்திற்கும் இரண்டடியே அளவாகக் கொள்ளப்படுகிறது.



குறள்வெண்செந்துறை



இரண்டடியாய் அளவொத்து, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பெற்று வருவது குறள்வெண்செந்துறையின் இலக்கணமாகும். ஒழுகிய ஓசை என்பது சந்த அமைப்பைக் குறிக்கும். விழுமிய பொருள் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருண்மையைக் குறிக்கும்.



கண்கள் காணும் காட்சி எல்லாம்
          கண்கள் தேடிக் காண்பதில்லை
கண்கள் மட்டும் ஊமை என்றால்
          காணு மின்பம் ஏது மில்லை. - பாவினச் செய்யுட்கோவை பா. 1



குறட்டாழிசை



இரண்டடியாய், ஈற்றடி குறைந்து வருவது குறட்டாழிசையின் இலக்கணமாகும்.



பெண்ணியம் என்பது பெண்களைப் போற்றுதல்

ஆண்களைத் தூற்றுதல் அல்லவே. - பாவினச் செய்யுட்கோவை பா. 10


வெண்பா இனம்



வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்பன வெண்பாவின் வகைகளாகும்.



வெண்பா மூன்றடியானும் நான்கடியானும் அமையும் என்பதால் அதன் இனங்களும் மூன்றடி, நான்கடியாய் அமைகின்றன.



வெண்டாழிசை



மூன்றடியாய், வெண்பா அமைப்பைப் பெற்று வேற்றுத்தளை விரவி வருவது வெண்டாழிசை எனப்படும்



கணுக்களிலே உயிர்வளர்த்திடும் கடித்துண்டால் சுவைகொடுக்கும்

எறும்புமுதல் பலஉயிர்கள் இதைக்கண்டால் விரும்பிஉண்ணும்
பயிர்களிலே பணப்பயிராம் கரும்பு   -   பாவினச் செய்யுட்கோவை பா. 19


வெண்டுறை



மூன்றடி முதல் ஏழடி வரை பாடப்படும். முன் அடிகளை விட பின் அடிகள் சீர்கள் குறைந்து வரும்.



கனவுகள் இலையெனில் உயர்வுகள் இலையடா கனவுகாண்

பணத்தினால் பெருமைகள் வருவது இலையடா பணிவுகொள்
அணைக்கிற கரங்களே உறவினை வளர்த்திடும்
அணைத்திட நினைத்திடு உறவினை வளர்த்திடு
                                                                                 - பாவினச் செய்யுட்கோவை பா. 25


வெளிவிருத்தம்



மூன்றடியானும் நான்கடியானும் முற்று பெற்று அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வருவது வெளிவிருத்தம் எனப்படும்.



கண்ணில் பூக்கும் காதல் அல்ல - நட்பு

மண்ணில் வேராய் சேர்ந்து வாழும் - நட்பு
கண்ணில் காட்டும் காட்சி யல்ல - நட்பு
உன்னுற் தோன்றும் எண்ணம் தானே - நட்பு 
                                                                                 - பாவினச் செய்யுட்கோவை பா. 45


ஆசிரியப்பா இனம்



ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, ஆசிரியவிருத்தம் என்ற மூன்றும் ஆசிரியப்பாவின் இனங்களாகும்.



ஆசிரியத்துறை



நான்கடியாய் ஈற்றடி குறைந்து வருவதும், ஈற்றடி குறைந்து இடைமடக்காய் வருவதும், இடையிடை குறைந்து வருவதும், இடையிடைக் குறைந்து இடைமடக்காய் வருவதும் ஆசிரியத்துறை இலக்கணமாகும்



வேலையில் சோம்பலைக் கண்டவர் எந்திரம் செய்கிறார்

வேலையை எந்திரம் செய்வதால்
வேலையில் லாமலே போகுது
வேலையில் சோம்பலை ஓட்டினால் வெல்வது நிச்சயம்
                                                                                   - பாவினச் செய்யுட்கோவை பா. 75


ஆசிரியத்தாழிசை



மூன்றடியாய் தம்முள் அளவொத்து வதுவது ஆசிரியத்தாழிசை எனப்படும்



சங்கொடு சக்கரம் கைகளில் ஏந்தியே

பாண்டவர் புத்திரர் தன்குறைத் தீர்த்திட
மண்ணிலே கீதையைத் தந்தவன் கண்ணணே.
                                                                                      - பாவினச் செய்யுட்கோவை பா. 54


ஆசிரியவிருத்தம்



கழிநெடிலடி நான்காய் அளவொத்து வருவது ஆசிரியவிருத்தத்தின் இலக்கணமாகும்



வளர்ந்துவதும் ஒருமரத்தின் இருகிளையில் ஒருகிளைக்கு

          உரம்போட்டு மறுகிளையை ஒடித்துவைத்தால் பலன்தருமோ?
வளம்செழிக்கும் ஓர்ஆற்றின் இருகரையில் ஒருகரையை
          உயர்த்திகட்டி மறுகரையை உடைத்துவிட்டால் பயன்உண்டா?
நலம்மிகுந்த இருகண்ணில் ஒருக்கண்ணைப் பறித்தெடுத்து
          மறுக்கண்ணில் மருந்துவிட்டால் பொருட்காட்சி தெரிவதுண்டோ?
பலன்கொடுக்கும் ஒருதெய்வம் ஒருவருக்கு அருள்கொடுத்து
          எளியவரை ஒதுக்கிவைத்தால் இறைவனென்று மொழிவதுண்டா? 
                                                                                     - பாவினச் செய்யுட்கோவை பா. 91


கலிப்பா இனம்



கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்ற மூன்றும் கலிப்பாவின் இனங்களாகும்.



கலித்தாழிசை



.இரண்டடி முதலாக பல அடியானும் அமைந்து ஈற்றடி மிக்கு வருவது கலித்தாழிசை எனப்படும்.



படித்திட படித்திட அறிவொளிப் பெருகுமே

படித்தவர் செயல்பட புதுமைகள் பிறக்குமே
படித்திட நினைத்திடு உலகினை உயர்த்திடு அறிவினால்.
                                                                                  - பாவினச் செய்யுட்கோவை பா. 95


கலித்துறை



ஐஞ்சீரடி நான்காய் வருவது கலித்துறை எனப்படும்



கலிவிருத்தம்



நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தமாகும்.



வஞ்சிப்பாவினம்



வஞ்சித்துறை, வஞ்சித்தாழிசை, வஞ்சிவிருத்தம் என்ற முன்றும் வஞ்சிப்பாவின் இனங்களாகும்.



வஞ்சித்துறை



இருசீரடி நான்காய் தனித்து வருவது வஞ்சித்துறையாகும்



வஞ்சித்தாழிசை



இருசீரடி நான்காய் மூன்றடுக்கி வருவது வஞ்சித்தாழிசையாகும்



வஞ்சி விருத்தம்


முச்சீரடி நான்காய் வருவது வஞ்சிவிருத்தம்.