Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 10, 2019

பி.இ. கலந்தாய்வு குறித்து வெளியாகும் தகவல்கள் தவறு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விளக்கம்

பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு குறித்து வெளியிடப்பட்டு வரும் தவறான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கான இணையதளப் பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 62,800 மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகளைச் செய்துள்ளனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தேசிய தகவல் மையம் ஆகிய அரசு நிறுவன அதிகாரிகளின் வழிகாட்டுதலுடனும், அரசு பொறியியல் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவின் அறிவுரைப்படியும் ஆன்-லைன் கலந்தாய்வுப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொழில்நுட்பக் கல்வித் துறை ஏற்கெனவே பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, பகுதி நேர பி.இ. சேர்க்கை, எம்.பி.ஏ., எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வை அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆண்டின் பி.இ. சேர்க்கையில் இணையதள உரிமம் புதுப்பிக்கப்படவில்லை, கலந்தாய்வு சேர்க்கைப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது போன்ற தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்திகளை மாணவர்கள் நம்பவேண்டாம். மாணவர்கள் தொடர்ந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பப் பதிவை உரிய காலத்தில் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.