Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 14, 2019

தகுதித் தேர்வுகளில் இடஒதுக்கீடு முறை கூடாது


தகுதித் தேர்வுகளில் எந்தவொரு இடஒதுக்கீட்டு முறையும் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
ஆசிரியர்களுக்கான மத்திய தகுதிகாண் தேர்வில் (சிடெட்-2019), பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.


சம்பந்தப்பட்ட மனு மீது, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, மாணவர் சேர்க்கை என்று வரும்போது அதில் இடஒதுக்கீடு அளிக்கப்படலாம். ஆனால், தகுதித் தேர்வில் எந்தவொரு இடஒதுக்கீடு முறையும் இருக்கக் கூடாது. அது தவறாக அர்த்தம் கொள்ள வழிவகுக்கும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சிடெட் தேர்வு தொடர்பாக வெளியான அறிவிக்கை ஒன்றை சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கோ, பழங்குடியினருக்கோ கூட இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அந்த அறிவிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.


எனினும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து, இதுதொடர்பாக வரும் 16-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மனுதாரர்களான ரஜ்னீஷ் குமார் பாண்டே உள்ளிட்ட சிலர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த நாங்கள், வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் சிடெட் - 2019 தேர்வில் பங்கேற்க இருக்கிறோம். இந்தத் தேர்வை நடத்துவது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியான விளம்பரம் ஒன்றை சிபிஎஸ்இ சமீபத்தில் வெளியிட்டது.


அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இத்தேர்வில் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஒபிசி வகுப்பினரைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட உரிமையை மறுப்பதாக உள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.