Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 1, 2019

TNUSRB - அரசு பணி தேர்வுக்கு நிபந்தனை அறிவிப்பில் தெரிவிக்க உத்தரவு


'அரசுப் பணி தேர்வுக்கு, நிபந்தனை இருந்தால், அதை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும் போதே, தெரிவிக்கவேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



காவல் துறை தொழில்நுட்பம் மற்றும் கைரேகை பிரிவில், எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, 2018 ஜூலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.தேர்வில் தேர்ச்சிஅடைந்து, மருத்துவப் பரிசோதனையில், பார்வைத் திறன் குறைபாடு உள்ளதாக, சிலர் நிராகரிக்கப்பட்டனர். இதை ரத்து செய்து, பணி வழங்க உத்தரவிடக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள்,உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதி, ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:



எஸ்.ஐ., பணிக்கு முழு பார்வைத்திறன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, முதலில் அறிவிக்காமல், தேர்வு முடிந்த பின், தெரிவித்தது ஏற்புடையதல்ல.முதலில் தெரிவிக்காமல், தேர்வில் வெற்றி பெற்றபின், புதிதாக நிபந்தனை விதிப்பது சரியல்ல.மனுதாரர்களின் பார்வைத்திறன்குறைபாடு, எளிதில் சரிசெய்யக் கூடியதே.அவர்களை நிராகரித்தது சட்டவிரோதம். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு, எஸ்.ஐ., பணி வழங்க, அரசு பரிசீலிக்க வேண்டும்.



எதிர்காலத்தில், பணி நியமனத்திற்கு நிபந்தனைகள் இருந்தால், தேர்வு அறிவிப்பு வெளியிடும்போதே, அரசு தெரிவிக்க வேண்டும். இந்நடைமுறை, தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கு, தடையை ஏற்படுத்தாது.இவ்வாறு, உத்தரவில் கூறினார்.