Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 10, 2019

சத்துணவுத்துறையில் காலியிடங்களை நிரப்ப ... கூடுதல் பணி சுமையால் ஊழியர்கள் அவதி


மதுரை மாவட்டடத்தில் கூடுதல் பணிச்சுமையை தவிர்க்க சத்துணவுத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டது போல நேர்மையான முறையில் நியமனம் நடக்க வேண்டும் என நேர்முகத்தேர்வில் பங்கேற்றோர் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் என 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இவற்றில் தகுதியானவர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அவர்களுக்கான நேர்முகத்தேர்வு 2017 மே மாதம் மூன்று நாட்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 1600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க தனித்தனி பட்டியல் கொடுத்ததால் நியமனம் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ளது.சமீபத்தில் இதுபோல இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை கலெக்டராக இருந்த நாகராஜன் தகுதியின் அடிப்படையில் துணை கலெக்டர்கள் கொண்ட குழு மூலம் தேர்வு செய்து நியமித்தார். இது ஆளுங்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் கலெக்டர் பணி மாற்றமும் செய்யப்பட்டார்.

இதுபோல மாவட்ட அதிகாரிகள் நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சத்துணவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சத்துணவு பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்க முடியாத நிலையும் உள்ளது. எனவே தேர்வு குழுவை ஏற்படுத்தி காலி பணியிடங்களை நிரப்ப மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.