Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2019

நாட்டுக்கும் சேவை செய்யலாம்... மருத்துவரும் ஆகலாம்! - வழிகாட்டும் புனே மருத்துவக் கல்லூரி


பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பலருக்கும் ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே நேரம் அவர்கள் மேற்படிப்பையும் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருப்பர். அவர்களுக்கு ஏற்ற வகையில் நாட்டுக்கும் சேவை செய்யலாம், மருத்துவரும் ஆகலாம் என்ற அரிய வாய்ப்பை அளிக்கிறது, புனேவில் இருக்கும் ராணுவ மருத்துவக் கல்லூரி. நாட்டில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ மருத்துவக் கல்லூரியான இதில் சேர்ந்தால், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளையும் அடையலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1948-ம் ஆண்டில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கையானது நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. அதற்கு, இந்தக் கல்லூரியும் விதிவிலக்கல்ல. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் சில தகுதிகளும் தேவைப்படும். ப்ளஸ் டூவில் முதல் தேர்விலேயே தேர்வாகியிருக்க வேண்டும்.


இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டியது அவசியம். இதுதவிர ஆங்கிலமொழித் திறனை சோதிக்கும் ToELR தேர்வு தனியாக நடத்தப்படும். அதில் கிடைக்கும் மதிப்பெண் நீட் மதிப்பெண்களுடன் சேர்க்கப்பட்டு நான்கால் வகுக்கப்படும். அதன் பிறகு நேர்காணலில் 50-க்கு எவ்வளவு மதிப்பெண் என்று சேர்க்கப்பட்டு இறுதியான தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். தரவரிசையில் முன்னிலைவகிக்கும் மாணவர்களுக்கு, கல்லூரியில் இடம் கிடைக்கும். எழுத்துத் தேர்வு தவிர்த்து இங்கே சேர்வதற்கு உடல் தகுதியும் அவசியம். ஆண், பெண் ஆகிய இருவருக்கும் தேவைப்படும் உடல் தகுதி விவரங்கள், இணையதளத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரியில் மொத்தம் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 5 மத்திய அரசுக்கானவை. மீதம் இருக்கும் 145 இடங்களில் 115 இடங்கள் ஆண்களுக்கும், 30 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் பத்து இடங்கள் (SC/ST) மாணவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டுமே இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு குறைந்தபட்சம் 17 வயது, அதிகபட்சமாக 24 வயது. திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும், கல்லூரியில் பயிலும் காலத்தில் திருமணம் செய்யவும் அனுமதியில்லை. இங்கே படிக்க வேறு எந்தக் கட்டணமும் கிடையாது. செலவு முழுவதும் அரசே ஏற்றுக்கொள்கிறது. தவிர, உதவித்தொகையும் வழங்குகிறது. நான்கரை ஆண்டுகால படிப்புக்குப் பிறகு ஒன்றரை வருடம் பயிற்சி மருத்துவராக, கட்டாயம் பணிபுரிய வேண்டும்.
அதன் பிறகே எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல் படை என முப்படைகளில் எதில் வேண்டுமானாலும் மருத்துவராகப் பணிபுரியலாம். மேலும் இந்தக் கல்லூரியில் பயின்றவர்கள், ராணுவத்தில் குறைந்தது ஏழு வருடங்கள் கட்டாயமாகப் பணிபுரிந்தாக வேண்டும். விருப்பம் இருந்தால் பணி நிறைவு வயது வரை ராணுவத்தில் பணியாற்றலாம்.

அதைக் கல்லூரியில் சேரும்போதே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். ராணுவ விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவர். ராணுவத்தினர் பெறும் அனைத்து சலுகைகளையும் இவர்களும் பெறுவர். காது, மூக்கு, தொண்டை நிபுணரும், மேஜருமான மருத்துவர் நிர்மல் குமார், இது பற்றிக் கூறும்போது ``நாட்டுக்கு ராணுவ சேவை செய்துகொண்டே மருத்துவராகும் அருமையான ஒரு வாய்ப்பு, இந்தக் கல்லூரியில் மட்டுமே கிடைக்கிறது.
இந்தக் கல்லூரியைப் பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியவில்லை. ஆனால், வட மாநிலங்களில் அதிக விழிப்புணர்வு உள்ளது.

புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில் அவர்களே அதிக அளவில் சேர்கிறார்கள். தமிழக மாணவர்களை இந்தக் கல்லூரியில் சேர ஊக்குவிக்கும் வகையில், அதைப் பற்றிய தகவல்களை மாணவர்களிடத்தில் தமிழக அரசு கொண்டுசெல்ல வேண்டும்" என்றார். இந்தக் கல்லூரி பற்றி மேலும் தகவல் அறிய https://www.afmc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்