Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 12, 2019

பி.இ. சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு: உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு


பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு புதன்கிழமையுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ள 2019-20 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு புதன்கிழமையுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், அழைக்கப்பட்ட 74 ஆயிரம் பேரில், 59,500 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 14,500 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை இன்றி காலியாகும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களின் நலன் கருதி, சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 46 கலந்தாய்வு உதவி மையங்களில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், சில மையங்களில் கூடுதலாக ஒருநாள் அவகாசம் தேவை என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் ஒரு நாள், வியாழக்கிழமை (ஜூன் 13) வரை நீட்டிக்கப்படுகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும், பொறியியல் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 044 - 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
இதுவரை 6,712 மாணவர்கள் தொலைபேசி மூலமும், 2,114 பேர் நேரடியாகவும், 23,724 மாணவ, மாணவிகள் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.