Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 18, 2019

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சிறப்புத் துணைத் தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளன.
இதில் தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து, விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 19), திங்கள்கிழமை (ஜூலை 22) ஆகிய இரண்டு நாள்களில் நேரில் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.


தேர்வர்கள், தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி, பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்தில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெற பாடம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக ரூ.275 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கான கட்டணம் உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.