Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 22, 2019

78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அனுமதி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 4 பொறியியல் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் முதல் கட்டமாக 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற தமிழகத்திலிருந்து ஏற்கெனவே 18 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்காத நிலையில், மேலும் 4 கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கையை இந்த ஆண்டு முதல் நிறுத்திக்கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்திருக்கிறது.
இதன் மூலம் நிகழாண்டில் 22 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.


அமெரிக்க பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011-ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்தது.

பெரிய அளவில் பணிகள் கிடைக்காததால், இந்த நிறுவனங்கள் ஆள்குறைப்பில் ஈடுபட்டன. இதன் காரணமாக 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைந்தது. மாணவர் சேர்க்கை குறைந்ததால், பொறியியல் கல்லூரிகளும் படிப்படியாக மூடப்பட்டு வந்தன.

ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில்) புள்ளி விவரத்தின்படி, 2015-16-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 2016-17-இல் இந்த எண்ணிக்கை 527 ஆகக் குறைந்தது. 2017-18-ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 523 ஆக மாறியது.

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மீண்டும் மேம்படத் தொடங்கியது. தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வம் மீண்டும் எழுந்தது. இதையடுத்து, 2018-19 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை மீண்டும் 533 என்ற நிலையை எட்டியது.



22 கல்லூரிகளில் சேர்க்கை இல்லை: ஆனால், கல்லூரி நிர்வாகிகள் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மாணவர் சேர்க்கைக் குறைந்தது. அண்ணா பல்கலைக்கழகப் புள்ளி விவரங்களின்படி, 2018-19ஆம் கல்வியாண்டு பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் மொத்தம் இடம் பெற்றிருந்த 1,72,581 இடங்களில் 74,601 இடங்கள் மட்டுமே நிரம்பின.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 ஆயிரம் இடங்கள் குறைவாகும். மொத்தத்தில் 43 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. அதிலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 90 ஆயிரம் பி.இ. இடங்களுக்கு சேர்க்கை பெறவில்லை. 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 47 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.

இந்த நிலை காரணமாக, பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்துவதும், சேர்க்கை இடங்களைப் பாதியாகக் குறைப்பதும் 2019-20ஆம் கல்வியாண்டிலும் தொடர்ந்துள்ளது.



ஒவ்வொரு கல்வியாண்டும் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும்.


இந்த அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை தமிழகத்தில் உள்ள 18 பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்கவே இல்லை. இதனால், இந்த கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் சேர்க்கை நிறுத்தப்படுவது உறுதியானது.

மேலும் 4 கல்லூரிகள்:


இந்தச் சூழலில், தமிழகத்தில் மேலும் 4 கல்லூரிகளில் நிகழாண்டு முதல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஜலதாம்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பிரிவு, நாமக்கல் மாவட்டம் கொசவம்பாளையம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நான்கு கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ அனுமதி அளித்திருக்கிறது


இதுபோல நாடு முழுவதும் 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் நிகழாண்டில் முதலாமாண்டு சேர்க்கையை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது

Popular Feed

Recent Story

Featured News