Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 24, 2019

கால்நடை மருத்துவப் படிப்புகள்: நாளை கலந்தாய்வு தொடக்கம்


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச். / பி.டெக்.) 460 இடங்கள் உள்ளன.


இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல் நிறைவடைந்தது. அதில், பிவிஎஸ்சி - ஏ.ஹெச்., படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக்., படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்., படிப்பில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வாதியும் (கட்-ஆப் மதிப்பெண் - 199.50), பி.டெக் படிப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.லட்சுமி பிரியதர்ஷினியும் (கட்-ஆப் மதிப்பெண் - 197.25) முதலிடத்தைப் பிடித்தனர். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.


வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் அக்கலந்தாய்வில், முதல் நாள் காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நண்பகல் முதல் 27-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அழைப்புக் கடிதம் மற்றும் தரவரிசை விவரங்கள் ஆகியவற்றை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in) இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.