Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 22, 2019

புதிய கல்விக் கொள்கை - சுரேன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பிள்ளைகளின் நிலை எனக்குத் தெரியும். அப்பாவும் அம்மாவும் பெங்களூரில் கட்டிட வேலை பார்ப்பார்கள். சீசன் நேரங்களில் கரும்பு வெட்ட ஊர் ஊராகச் செல்வார்கள்.

சிலர் கேரளாவில் தோட்ட வேலையில் இருப்பார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். பிள்ளையை ஊரில் பாட்டியிடமோ பங்காளிகள் வீட்டிலோ விட்டுச் சென்றிருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் தினமும் பள்ளிக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டு நாலு இருபது வரை பள்ளியில் இருந்து சென்றாலே பெரிய சாதனை.



தனியார் பள்ளிகளில் உருட்டுவது மிரட்டுவதைப் போல் ஏன் ஹோம் வொர்க் செய்யவில்லை, ஏன் லேட்டாக வந்திருக்கிறாய்?, ஏன் சீருடை அழுக்காக இருக்கிறது என்று எல்லாம் அதட்ட முடியாது. ஒரு நாள் அப்படிக் கேட்டால், மறுநாள் பள்ளிக்கு வரமாட்டான். பள்ளியில் அமர்ந்திருந்தால் அவன் காதில் விழுந்திருக்கக் கூடிய நாலு எழுத்தையும் வாயில் விழுந்திருக்கக் கூடிய நாலு சோற்றையும் பறித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இரண்டு நாள் பார்த்துவிட்டு ஆசிரியரே ஊருக்குள் இறங்கிச் சென்று தாஜா செய்து அழைத்து வரவேண்டும்.

ட்யூஷன் வசதிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலைக்கு அதுவெல்லாம் ஒத்துவராது. சீருடையை துவைத்துக் கொடுக்க நேரத்திற்கு பிள்ளையை கிளப்பி பள்ளிக்கு அனுப்ப எல்லாம் வீட்டில் ஆளிருக்க மாட்டார்கள். தமது தம்பி தங்கைகளை குளிப்பித்து உணவளித்து பள்ளிக்கு கூட்டி வரும் பெரிய பெண்பிள்ளைகளை நீங்கள் கிட்டத்தட்ட எல்லா அரசுப் பள்ளிகளிலும் காணலாம். இத்தனை இடர்களுக்கு மத்தியில்தான் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள், இங்கிருந்தும் பிள்ளைகள் சிறப்பாகப் படித்து வெளியே வருகின்றன.



பள்ளிக் கல்வித் துறையில் 'இடைநிற்றல்' என்கிற வார்த்தை இருக்கிறது. மாணாக்கர் பள்ளியில் சேர்ந்து பிறகு தேர்வுகளில் தோல்வியுறல், பெற்றோருக்கு வேலையில் ஒத்தாசை செய்ய இன்னபிற காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விடுவது. இந்தப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பிலேயே பரீட்சை வைத்து தரமில்லையென்று பெயிலாக்குவீர்கள் என்றால் அவர்கள் பெற்றோருக்கு ஒத்தாசை செய்யப் போய் விடுவார்கள். இந்த 'இடைநிற்றல்' வீதம் அதிகரிக்கும்.



எல்லோரையும் நமது நிதி நிலைமை, சமூக அந்தஸ்து, வசதிகளை வைத்தே முடிவு செய்யக்கூடாது. அடிமட்ட நிலையில் பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் அருகிலிருக்கும் அரசுப் பள்ளிக்குச் செல்லுங்கள். அங்குள்ள பிள்ளைகளிடம் மனது விட்டுப் பேசுங்கள். அவர்களின் வீட்டு நிலைமை புரியும். புரிந்தால் மூன்றாவது ஐந்தாம் வகுப்பிற்கெல்லாம் பொதுத்தேர்வு என்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பதும் புரியும். அரசு என்ன செய்தாலும் ஆமாம் சாமி போடுவதற்கா நாம் படித்திருக்கிறோம்.

Popular Feed

Recent Story

Featured News