Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 9, 2019

மாணவர்களுக்கு இலவச பயண அட்டை: 8 ஆண்டுகளுக்கு ரூ.4,084.30 கோடி ஒதுக்கீடு


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டைக்கான தொகையை ஈடு செய்வதற்காக ரூ.4,084.30 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 8 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கோட்டங்கள் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களில் சிலருக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.


இதன்படி மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், மத்திய - மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள், நாடகக் கலைஞர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு பயணச் சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி செல்வோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய குழந்தை மற்றும் தொழிலாளர் திட்ட நலப் பள்ளி, அரசு பல்தொழில்நுட்ப பயிலகங்கள், அரசு தொழிற்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு, பேருந்தில் கல்விக் கூடம் சென்று வருவதற்கான பயணக் கட்டணத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகின்றன.


இதே போல் தனியார் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கும் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகின்றன.
இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கு ஏற்படும் செலவை ஈடு செய்ய கடந்த 8 ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.4,084.30 கோடியை தமிழக அரசு வழங்கி உள்ளது. 2018-19 ஆம் ஆண்டுகளில் மட்டும் ரூ.764.72 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான பயண அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது கடந்த வருட பயண அட்டையை மாணவர்கள் காண்பித்தோ பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இதனை சாதகமாகப் பயன்படுத்தி அதிக அளவில் போலி மாணவர் பயண அட்டை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் அவ்வப்போது பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment