Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 13, 2019

சித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரியப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (செப்.13) நிறைவடைகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அடுத்த சில நாள்களில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளைப் போலவே, சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் இம்முறை நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதையடுத்து, பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்திருப்பதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதற்கு இறுதி நாள் என்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment