Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 17, 2019

"B.E - Mech துறையை தேர்வு செய்யுங்க" மாணவிகளுக்கு ஆலோசனை .!!

மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு எங்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் மாணவிகள் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்வதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.





இதைவிட வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன் சுந்தரராஜன் கூறுகையில், "ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறைக்குத் தேவையான பெண்களை அண்ணா பல்கலைகழகத்தில் படித்தவர்களை தேர்வு செய்துவருகிறோம். ஆனால் தற்போது மெக்கானிக்கல் பிரிவில் மாணவிகள் சேர்வதே குறைந்துவருகிறது. எனவே மெக்கானிக்கல் பிரிவில் மாணவிகள் அதிகளவு சேரவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.

அதேபோல் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகிறோம். மேலும் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியும் அளித்து வருகிறோம்.அந்தக் காலத்தில் இருந்ததுபோல் ஆட்டோமொபைல், கார் உற்பத்தி துறையில் மனித உழைப்புகள் தற்போது தேவைப்படுவதில்லை. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறிவினைப் பயன்படுத்தி செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அதிகளவில் மெக்கானிக்கல் பிரிவில் சேரலாம்" எனத் தெரிவித்தார்.





இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் தியாகராஜன் கூறும்போது, "மெக்கானிக்கல் பிரிவில் மாணவிகள் அதிகளவில் சேரும் வகையில், தமிழ்நாட்டில் ஐந்து மண்டலங்களில் கடந்தாண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கில் 600 மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்தாண்டு சுமார் பத்தாயிரம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே இந்தப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிவருபவர்களை கொண்டும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தில் மெக்கானிக்கல் பிரிவில் சேரும் மாணவிகள் அந்தக் காலங்களில் இருந்ததுபோல் சுத்தியல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பணிசெய்ய வேண்டிய நிலைமை இப்போது இல்லை. நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் எளிதாகப் பணிசெய்யலாம் என்பதை விளக்கிக் கூறுகிறோம்.மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது அவர்கள் தங்களுக்குரிய திறனை வளர்த்துக் கொள்வதில் அடிப்படையிலேயே அமைகிறது" எனத் தெரிவித்தார்.