தமிழ் இலக்கியத்தைத் தமிழர்களுக்கு அப்பாலும் கடத்த வேண்டும்! மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம் பேச்சு!

சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 04.10.2019, வெள்ளி அன்று நடைபெற்ற " கோட்பாட்டு நோக்கில் நாவல் இலக்கியம்" என்னும் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழாவில் 'புலம்பெயர் தமிழ் நாவல் இலக்கிய வகைமை' (Genre of Diaspora Tamil Novels) எனும் பொருண்மையில் மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், வரலாற்று நாவல், துப்பறியும் நாவல், அறிவியல் நாவல், சுயசரிதை நாவல் ஆகிய தமிழ் நாவல் வகைமைகளின் வரிசையில் 21ஆம் நூற்றாண்டில் புலம்பெயர் தமிழ் நாவல் என்ற புதிய இலக்கிய வகைமையும் தமிழில் தோன்றியுள்ளது.



ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொடங்கி இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் மற்றும் போர்க் காலம் வரை தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டில் அனுபவித்து வரும் சுக துக்கங்களையும் தாய்நாட்டின் ஏக்கத்தையும் குறித்துப் பதிவுச் செய்து வருகின்றனர். அப்பதிவுகளும் எழுத்துக்களும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியங்களில் முழுவதுமாக அந்நியப்படுத்தப்பட்ட தன்மை, தாயகத்தை தொடர்ந்து அன்பு செய்தல், இரட்டை அடையாளத் தன்மை, புலம்பெயர்வுக்குக் காரணமான மற்றும் புலம்பெயர்வின்போது நிகழ்ந்த வலிகள், வேதனைகள் ஆகியவை கருப்பொருளாக அமைகின்றன.



இன்று 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அயல்நாடுகளில் மட்டும் சுமார் 2 கோடியே 40 இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று உலகளவில் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு அப்பால் பரவவில்லை. தமிழர்களிடையேயும் வாசிப்புத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அயலகத்தில் வாழும் புதிய தலைமுறையினர் தமது பெற்றோர் மொழி, பெற்றோர் இலக்கியம் என ஒதுங்கிக்கொள்ளும் போக்கும் காணப்படுகின்றது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளத்தையும் பெருமையினையும்

அந்தந்த நாட்டு மொழிகளிலும் பிறமொழி பேசும் மக்களிடமும் கடத்துவதற்கு தமது முயற்சிகளை அயலகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.



இக்கருத்தரங்கில் செல்லம்மாள் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவரும் இக்கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான பேரா. முனைவர் விமலா, கல்லூரி முதல்வர் வெ. கலைவாணி, இலண்டன் சிவா பிள்ளை, பேரா.தி. கமலி, முனைவர் சுசா, பேராசிரியர் சுதந்திரமுத்து, அமெரிக்க எழுத்தாளர் விஜியலட்சுமி,

ஆஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி சாரதா உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.



Share:

Total Pageviews

Categories