Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 1, 2019

ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்!!



*ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள்.* அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக கவனித்தால், அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது. *‘‘அவர்களுக்குப் பாடம் எடுங்கள்’’* என்று உங்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தால், நீங்கள் போய் பாடமெடுத்தால் மட்டுமே, ஆசிரியரின் கடின உழைப்பு புரியும்.


40 மாணவர்களையும் முதலில் அமைதியாக இருக்க வைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் அதட்ட வேண்டும், கொஞ்சம் அன்பாகப் பேச வேண்டும், கொஞ்சம் கெஞ்ச வேண்டும். ‘‘பிரின்சிபல் (தலைமை ஆசிரியர்) கிட்ட சொல்லிருவேன்’’ என்று மிரட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அதிகமாகச் செய்தாலும் பிரச்சனை வந்து விடும்.
இப்போதெல்லாம் பலரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்வதால், குழந்தைகள்மீது அதிக பாசம் வைக்கிறார்கள். பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் முகம் லேசாக வாடினாலே பள்ளிக்குத் தேடி வந்து விடுகிறார்கள்.


அதனால் ஆசிரியர்களால் அதிகம் அதட்டவும் முடியாது. அப்படி அதட்டாமல் அன்பாகச் சொன்னால் மாணவர்களை உடனே கட்டுப்படுத்தவும் முடியாது. வகுப்பின் நேரமே 40 நிமிடங்கள்தான். அங்கே அன்பாகப் பேசி கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் எடுக்க முடியாது. பாடம் எடுத்து, அது ஒவ்வொரு மாணவருக்கும் புரிந்திருக்கிறதா?என்று கவனிக்க வேண்டும்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்றால், அதை மாணவர்கள் ஒழுங்காக நோட்டில் எழுதுகிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
இப்படி 40 நிமிடங்களில் ஓர் ஆசிரியர் பெற்றோரை, மாணவரை, தலைமையாசிரியரை, கல்வித்துறை அதிகாரிகளை என பலரையும் திருப்தி செய்ய வேண்டும். இவ்வளவையும் செய்து பாடத் திட்டத்தையும் சரியான காலத்தில் முடிக்க வேண்டும்.
ஆசிரியர் தொழில் என்பது முழுக்க முழுக்க மனித மனங்களோடு உறவாடுவதுதான்.


ஒரு பொறியாளர் மாதிரி வேலையை செய்துவிட்டுப் போக முடியாது. ஆசிரியர்களின் வேலையே பேசுவதுதான்.
ஆசிரியர்கள் வகுப்பில் பாடத்தை ஒருமுறைதான் சொல்லிக் கொடுக்க முடியும். அதைத் திரும்பத் திரும்ப வீட்டில் படிக்க வைப்பது பெற்றோர்கள் கடமையே.
இப்படி வகுப்பையும் கட்டுப்படுத்தி, ஒழுக்கத்தையும் போதித்து, கல்வியையும் போதிக்கும் ஆசிரியர்களை சரியாக ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ளும் போதுதான் அங்கே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.