Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 18, 2019

மயிலம் மலை முருகன் கோவில்

மயிலம் தலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது.




இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை. இதனால் இந்த மலைக்கு மயிலம் என்று பெயர். மயிலம் தலத்தின் சுருக்கமான தல வரலாறு:-




கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது. முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.




அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான். அவன் தனது விருப்பத்தை முரு கனிடம் தெரிவித்தான்.




உடனே முருகன், “நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வட கரையில் நின்று தவம் செய். உன் ஆசையைப் பூர்த்தி செய் கிறேன்” என்றார்.




அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான். அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.




மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித் தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார். சூரபதுமன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத் தலத் திற்கு உண்டு.




சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர். இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.




அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார். இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பால சித்தராக அவதாரம் எடுத்தார்.




பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார். முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.




இதையடுத்து வள்ளி, தெய்வ யானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார். பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.




அதன்படி அவர்கள் பாலசித்த ருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள். முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.




இதன் காரணமாக வள்ளி, தெய் வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்ட னர். எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?




எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார். அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.




இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார்.




பின்பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார். மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.




*மயிலம் ஆலய சிறப்புகள்*




மயிலம் கோவிலில் மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமமில்லாமல் ஏறும் விதமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பானது ஆகும்.




இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த் தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம்.




தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள்.




அப்போது பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என தோளில் விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி மலையேறுவது கண்கொள்ளாக் காட்சி!மலை உச்சியை அடைந்தால் ஒருபுறம் ராஜ கோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோயிலுக்குள் செல்ல 2 வழிகள் உள்ளன.




முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது.




இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். இதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.




பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம்.




இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.




பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி.




பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும்.




இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு.




சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.




*நொச்சி இலை*




முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன.




தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.




மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.




மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.




இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.




செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.




எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!




*3 உற்சவர்கள்*




மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.




பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.




மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது.




முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.




இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வரு வார் இந்த மூலவர்.




இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார்.




மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.




மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.




*பாலசித்தர் வழங்கும் வேலாயுதம்*




பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.




எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம்.




இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.




பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி.




பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.




தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.




*மயிலம் பொம்மபுர ஆதீனம்*




மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.




ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும்.




*ஆதீனத் தோற்றம்*




மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார்.




இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார்.




*ஆதீனகர்த்தர் சங்குகன்னர்*




அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார்.




அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவருக்கருகில் சிவயோக சமாதியுற்று சிவலிங்க வடிவமெய்தி அடியார்களால் வணங்கப்பெறும் நிலை பெறுக!’ என்று வாழ்த்தியருளினார்.




*சங்குகன்னர் அவதாரம்*




அவ்வழியே சங்குகன்னர் உலகில் கருவழித் தோன்றாமல் திருநீறு, உருத்திராக்கம், கல்லாடை, இட்டலிங்கம் அணிந்த மார்பு, செஞ்சடை, குண்டலமணிந்த திருச்செவிகள், சின்முத்திரையுடன் கூடிய வலக்கை, திருநீற்றுப்பை, மாத்திரக்கோல் இடக்கை, வீரசைவ ஆகமங்கூறும் திருவாய், ஐந்தெழுத்தை ஒலிக்கும் திருநாக்கு ஆகியவற்றுடன் கூடிய திருக்கோலத்துடன் பத்து வயது நிறைந்த பாலகனாகத் தோன்றினார்.




*ஆதீனத் தோற்றம்*




இதனை அடுத்துள்ள, பெருமுக்கல் முதலிய மலைகளுக்கும் வனங்களுக்கும், தம் யோக வல்லமையால் உலாவிச் சென்று ஆங்காங்குள்ள சித்தர்களுக்கும், அடியார்களுக்கும் வீரசைவ ஆகம நெறிகளை உணர்த்தினார்.




சித்துக்களையும் செய்தருளினார். பாலவயதினராய்ச் சித்துக்கள் பல செய்தமையால் பாலசித்தர் எனப்பெயர் கொண்டார். பிரம்மநிலையை உணர்ந்து தங்கியிருந்தமையால் இவ்வூர் பிரமபுரம் என வழங்கலாயிற்று.




பாலசித்தரின் தவஆற்றல் உலகில் பரவியதால் சீடர்கள் பலர் உருவாயினர்.




அச்சீடர்களின் பக்குவநிலையறிந்து ஞானஉபதேசம் செய்தருளித் தாம் தங்கிச் சிவயோகம் புரிவதற்கு அமைத்துக் கொண்ட திருமடம் பொம்மயபாளையத் திருமடம் என்ற பெயரில் அழைக்கப் பெறலாயிற்று.




*மயிலை வரலாறு*




இங்ஙனம் பாலசித்தர் திருமடத்தில் வீற்றிருக்கும் நாளில், சிவபெருமானது ஆணையின்வண்ணம் நாரதர், பாலசித்தர் முன் தோன்றி, ‘பொம்மபுரத்திற்கு மேற்கே மயூராசலம் (மயிலம்) என்ற ஓர் ஊர் உள்ளது.




ஆங்கே முன்னாளில் சூரபதுமன் மயில் வடிவ மலையாக இருந்து முருகனை நோக்கி, கடுந்தவம் புரிந்தனன். அதற்கு முருகப் பெருமான் சூரபதுமன் விருப்பப்படியே அவனை மயில்வாகனமாக ஏற்றருளினார்.




அவனும் “ஐயனே, மலைவடிவாக இருந்து யான் தவம் செய்தமையால் இம்மலை மயிலமலை என்ற பெயரால் வழங்க வேண்டும்” என்றும் “தேவரீர் எந்நாளும் இங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான்.




அவ்வாறே முருகனும் “சிலகாலத்திற்குப் பின்னர் இம்மலையில் பாலசித்தர் என்பால் எம்மை நோக்கி வந்து தவம் புரிந்து எம்முடன் போரிட்டு எம்மால் ஆட்கொள்ளப் பெறும் காலத்து எம்தேவியருடன் எழுந்தருளி நின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்றுரைத்து மறைந்தருளினார்.




எனவே, தாங்களும் மயிலமலையை அடைந்து தவம் செய்தால் எண்ணிய யாவும் கைகூடும்’ என்று நாரதர் பாலசித்தருக்கு உணர்த்தி விடைபெற்றார்.




*மயிலைத் தவம்*




இந்நிலையில், பாலசித்தர் மயிலம் அடைந்து அங்குள்ள சுனைகளில் நீராடி முருகனை வழிபட்டார். மேலும் முருகனை நோக்கி, பதுமாசனமாக முப்பத்தைந்து ஆண்டு காலம் தவநிலையில் இருந்தார்.




முருகன் அருள்புரியாததால் பஞ்சாக்கினி நடுவிலிருந்து கடுந்தவமும் புரியலானார்.




இந்நிலையிலும் முருகப்பெருமான் அருளாததால் அவர்தம் தேவியராகிய வள்ளி தெய்வயானையரை நோக்கி, பலநாள் தவம் செய்தார் பாலசித்தர்.




தேவியர் இருவரும் சித்தரின் தவத்திற்கு இரங்கி, அவருக்கு அருள்புரியுமாறு முருகப் பெருமானிடம் வேண்டினர்.




முருகனும் “அருள்புரியும் காலம் வருந்துணையும் யாம் அமைதியாக இருப்பதனை அறியாமல் அவருக்கு அருள்புரிய வேண்டுமென்று வற்புறுத்தும் நீவிர் இருவரும் எம்மை விட்டு அகல்வீராக” என ஆணையிட்டார்.




*அன்னையர் அருள்*




உடனே, பாலசித்தருக்கு அருள்புரியாத முருகன்பால் ஊடல் கொண்ட தேவியர் இருவரும் சித்தக் கன்னியர்களாக வடிவம் கொண்டு சித்தருக்கு முன் தோன்றி நின்றனர்.




அதனைக் கண்ட சித்தர் முருகப் பெருமானுடைய தேவியர்களே தம்மை ஆட்கொள்ள இவ்வுருக் கொண்டு எழுந்தருளினர் என யோக ஞான வல்லமையால் உணர்ந்து, அவர்களை உபசரித்து, “நீங்கள் யார்? வந்த காரணம் யாது?” என வினவினார்.




அவர்களும் “இவ்விடத்தில் சித்தர் இருப்பதை அறிந்து இங்கு உறைய விரும்பி வந்தோம். நீங்கள் உங்கள் புதல்வியர்களாக எங்களைப் போற்றிக் காத்தல் வேண்டும்” என வேண்டினர்.




அதற்குச் சித்தரும் உடன்பட்டுத் தேவியரை, தேவதச்சனைக் கொண்டு ஒரு மாளிகை உருவாக்கச் செய்து அதில் வீற்றிருக்கச் செய்தார்.




*முருகனொடு பொருதுதல்*




முருகப்பெருமான் பாலசித்தருக்கு அருள்புரியும் காலம் கனிந்தமையால் பிரிந்த தேவியரைத் தேடிவருவார்போல, மயில மலையை அடைந்து தேவியர் இருக்கும் இடம் இதுவெனத் துணிந்து போர்க்கோலம் கொண்ட அரசர் வடிவத்தில் அம்மாளிகையில் நுழையச் சென்றார்.




அங்கிருந்த பாலசித்தர், “கன்னியர் இருக்குமிடத்து ஆடவர் புகுதல் தகாது” எனத் தடுத்தும் முருகன் நுழைய முற்பட்டபோது இருவருக்கும் போர் ஏற்பட்டது.




பாலசித்தர் முருகன் எய்திய படைகள் அனைத்தையும் தடுத்ததோடு, இறுதியாக முருகன் ஏவிய வேலினையும் கன்னியர் அருளால் தம்வசப்படுத்திக் கொண்டார்.




முடிவில், முருகப்பெருமான் படைக்கருவிகள் அற்றநிலையில் சித்தருடன் நேருக்கு நேராக மற்போர் புரியத் தொடங்கினார்.




பாலசித்தரது மார்பில் அறைந்து அவரைக் கீழே தள்ளியும் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டும் காலால் உதைத்தும் போர் புரிந்து அருளினார்.




*மணக்கோலம்*




தம்மோடு போர்புரிந்தவர் முருகனே என உணர்ந்த பாலசித்தர் போர் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு திருவடி பணிந்து வேண்டி நின்றார்.




முருகனும் அவ்வாறே பாலசித்தருக்கு ஞான உபதேசம் வழங்கி மாளிகையினுள் இருந்த அரியணையில் அமர்ந்தார்.




அந்நிலையில் சித்தரும், தேவியர் இருவரையும் அழைத்து வந்து, அவர்களோடு முருகப் பெருமானை வணங்கி நின்று, “அடியேன் என் புதல்வியர்களாகப் பாவித்த இக்கன்னியர்களை தேவரீர் மணமுடித்து மணக்கோலத்துடன் இத்தலத்தில் எந்நாளும் எழுந்தருள வேண்டும்” என வேண்டினார்.




அவ்வாறே, முருகனும் உமாதேவியாரோடு சிவபெருமான் தேவகணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானித்தார்.




அக்கணத்தே, தேவகணங்கள் சூழ இறைவனும் இறைவியும் எழுந்தருளி மயன் வகுத்த மணிமண்டபத்தில் வீற்றிருந்தனர்.




சிவனது அருளாணையின் வண்ணம் நான்முகன் திருமணச் சடங்கு நிகழ்த்த, பாலசித்தர் தத்தநீர் வார்க்கவும், முருகன் கன்னியர் இருவரையும் மணந்தருளினார்.




*அருள் கனிந்தது*




அவ்வமயத்தில், சிவன் பாலசித்தரை நோக்கி, “இத்திருத்தலத்தில் நம் குமரனாகிய முருகன் என்றென்றும் திருவருளையும் குருவருளையும் வழங்கிக் கொண்டிருக்க இன்னும் ஐந்நூறு ஆண்டு காலம் அனைவருக்குக்கும் புலப்படுமாறு வெளிப்பட இருந்து வீரசைவ நெறியை ஓங்கச் செய்து, பின் முருகனின் வலப்பாகத்தில் ஜீவசமாதி நிலையடைந்து பின் அருளுருப் பெற்று அனைவருக்கும் அருள் வழங்குக!” என அருள்புரிந்தார்.




*சீடர் பரம்பரை*




இவ்வாறு அருள்பெற்ற பாலசித்தர், பொம்மபுரத்தை அடுத்த பெருமுக்கல் மலையில் தங்கியிருந்து வீரசைவ நெறிபரப்பிவந்த காலத்தில், சிதம்பரம் பச்சைக்கந்த மரபைச் சார்ந்த அம்மவை என்பார் மகப்பேறு இன்றி வருந்தினார்.




இனிச் சிவத்தொண்டே மேற்கொள்வது என்னும் திண்ணிய எண்ணத்தோடு பாலசித்தரை அணுகி, அவருக்குத் தம் கணவரும் தாமும் தொண்டு புரியலாயினர். அம்மவை அம்மையார் சித்தருக்குத் தாமே சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து வந்து கொடுக்கும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.




அங்ஙனம் கள்ளிப்பாலைத் தந்த அளவில் சித்தர் உண்டு எஞ்சிய கள்ளிப்பால் பிரசாத சேடத்தை அம்மவை அம்மையார் அருந்தியதால் குருவருள் வழி ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார்.




பாலசித்தருடைய அறிவுரைப்படி அவருடைய திருவருட் பார்வையால் அக்குழந்தை வளர்ந்து, அவருக்குத் தொண்டு செய்து வந்தது. அக்குழந்தையின் பக்குவநிலையுணர்ந்து சீடராக அமைத்துக் கொண்டார் பாலசித்தர்.




*சிவஞானபாலய தேசிகர்*




முருகன் அருள்பெற்ற பாலசித்தர் பொம்மபுர மடத்தில் அச்சீடருக்குச் சந்நியாசாசிரமம் தந்து, ஞானஉபதேசம் புரிந்து, பின்னர் ஆசாரிய அபிஷேகமும் செய்து, தமது அமிசத்திலே ஓர் அமிசம் அவரிடத்தில் பதியும்படி திருவருள் புரிந்து, அவர்தம்மை நோக்கி “நீ பாலை உணவாகக் கொண்டு, சீடபரம்பரையோடு சிவஞானபாலய தேசிகன் என வாழ்வாயாக!” என்று அருள்புரிந்தார்.




மேலும், “இத்திருமடம் பாலயசுவாமிகள் திருமடம் என்றும் வழங்குவதாகுக!” என அருள்புரிந்த நிலையில் பாலசித்தரின் சீடர் பரம்பரை மயிலம் திருமடத்தில் வீரசைவ நெறிபோற்றிச் சிவத்தொண்டை வாழையடி வாழையாக வளர்த்து வருகிறது.