Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 7, 2019

அறிவுரை கூறுவதைவிட குழந்தைகளிடம் கலந்துரையாடுவதே நல்லது: பெற்றோர், ஆசிரியர்களுக்கு மனநல நிபுணர்கள் வேண்டுகோள்



திருப்பூரில் தொடரும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத் தடுக்க குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைவிட, அவர்களுடன் கலந்துரையாடுவதை பெற்றோர், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

திருப்பூர் முருங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.சத்யா (16). குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 1-ம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கருவம் பாளையத்தைச் சேர்ந்த எஸ்.கலை வாணி (17), மங்கலம் சாலையி லுள்ள மகளிர் கல்லூரியில் படித்து வந்தார்.



இவர், கடந்த 30-ம் தேதி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் டி.மோகன்ராஜ் (19). கடந்த 3-ம் தேதி திருப்பூர் முதலி பாளையம் பகுதியிலுள்ள கல்லூரி யில் படித்து வந்தார். கடந்த 3-ம் தேதி கல்லூரி வளாக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் சத்யா, கலை வாணி ஆகிய இருவரும் மன உளைச்சலாலும், மோகன்ராஜ் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை தாங்க இயலாததாலும் தற்கொலை முடிவுகளை எடுத்தது, காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மட்டுமின்றி, பல்லடம் செம்மிபாளையத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் சஞ்சீவ் (13), மங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் ராஜன் (19) என மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது ஒரு வகையில், தங்கள் மீதான அழுத்தத்தை தாங்க இயலாததன் வெளிப்பாடே. இந்நிலை மாற வேண்டும் என்கின்ற னர் காவல் துறை அதிகாரிகள்.



திணிக்கக்கூடாது

இதுகுறித்து திருப்பூர் மாநகர் காவல் துறை துணை ஆணையர் எஸ்.பிரபாகரன் கூறும் போது, 'பெற்றோர் தங்களது எண்ணங்கள், விருப்பங்களை மாணவர்கள், குழந்தைகள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும். ஓர் அளவுக்கு மேல் அவர்களால் அழுத்தத்தை தாங்க இயலாது. இது மாற வேண்டும். பெற்றோர் மத்தியில் உரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எதையும் சாதகமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்' என்றார்.

குழுக்கள் செயல்பாடு?

சமூக ஆர்வலர் ஆர்.வி.சுப்ர மணியம் கூறும்போது, 'திருப்பூரில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது வருத்தமளிக்கிறது. இதைத் தடுக்க, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மனநல தத்துவ நிபுணர்கள் உள்ளனர். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள், வேலை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. இதேபோல, பின்னலாடை உற்பத்தி நிறுவனங் களிலும் தற்கொலை நிகழ்வுகள் தொடர்கின்றன. இதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்கள், கல்வித் துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகினர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.



பெற்றோருடன் சந்திப்பு

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க 2 மாவட்டங்களுக்கு ஒரு மனநல நிபுணர் நியமிக்கப் பட்டுள்ளார். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் களது மேற்பார்வையில், பள்ளி மாணவர்களிடையே கலந்துரை யாடல், மாணவர்களின் பெற்றோருடன் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குடும்பச் சூழல், காதல் பிரச்சினைகளால்தான் அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு உள்ளது. 100 பேரில் 80 மாணவர்கள் அறிவுரைகளைக் கேட்டு தவறான எண்ணங்கள், சிந்தனைகளில் இருந்து விடுபட்டுவிடுகின்றனர். அதில், 20 சதவீதம் பேர் மட்டும் சிக்குகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து, அவர்கள் தங்களது வாழ்வில் சந்தித்த கஷ்டங்கள், துயரங்களை பிள்ளைகளிடம் கூறி, அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடாது. அவர்களது விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், தவறான விஷயங்களை அவர்களது போக்கில் சென்று சரியான முறை யில் திருத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.



அக்கறை காட்டுங்கள்

திருப்பூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் பேராசிரியர் கே.செல்வராஜ் கூறும்போது, பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் பிரச்சினைகளை சமாளிக்கும் திறனை வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது, அதைத் தாங்கும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போகிறது. தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

குழந்தைகள் சோர்வாக இருந்தால் பெற்றோர், ஆசிரியர்கள் கேட்க வேண்டும். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைவிட்டு, அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்' என்றார்.