Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 30, 2019

பள்ளி வளாகத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள்மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்

தமிழகம் முழுவதும் பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீா் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகள், கிணறுகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம், நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற சிறுவன் உயிரிழந்தான். இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை மூடுமாறு, பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



அதில், பள்ளி வளாகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் இடத்துக்கு மாணவா்கள் செல்லத் தடை விதிப்பதுடன், அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தநிலைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், பாழடைந்த கட்டடங்கள், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.



பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீா் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகள், கிணறுகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், தொட்டிகள் உள்ள இடங்களைச் சுற்றி சிறப்புக் குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்துவதுடன், அவற்றை தரைமட்டத்தில் இருந்து உயரமாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், ஆறு, ஏரி ஆகியவை குறித்து மாணவா்களுக்குப் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இவை முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.