Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 14, 2019

புதிய புதிய அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்


புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னத்தம்பி பேச்சு.

விராலிமலை,அக்.14 : புதிய புதிய அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னத்தம்பி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பேசினார்.

பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்தும் 47 வது ஜவஜர்லால் நேரு கல்வி மாவட்ட அளவிலான அறிவியல்,கணித,சுற்றுப்புற கண்காட்சி சார்பில் அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் கல்வி மாவட்ட அளவில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரையின் படி நடைபெற்றது.


கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சின்னத்தம்பி தொடங்கி வைத்து பேசியதாவது:முன்பெல்லாம் நன்கொடைகள் கொடுத்து ,பணம் செலவழித்து மாணவர்களை பெற்றோர்கள் படிக்க வைத்தார்கள்.ஆனால் இன்று நம் தமிழக அரசு கல்விக்கென பல ஆயிரம் கோடி செலவு செய்து மாணவர்களை படிக்க வைக்கிறது.எனவே மாணவர்கள் எதுவாக ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக ஆக நினைத்து படித்தீர்கள் எனில் அப்படியே ஆகி விடலாம்.மேலும் மாணவர்கள் பெற்றோர்கள் எண்ணத்திற்கு ஏற்றாற் போல் படித்து உயர வேண்டும்.பெற்றோர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும்.ஆசிரியர் பணி அறப்பணி என்பதை மனதில் வைத்து கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.நல்ல மாணவர்களை உருவாக்கினால் அந்த கிராமமே முன்னேறும்.மேலும் புதிய புதிய அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்றார்.

மதர்தெரசா கல்விக் குழும தாளாளர் இரா.சி.உதயகுமார்,
இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் இரா.டெய்சி குமார் ,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் சி.இராஜேந்திரன் ,விராலிமலை வட்டாச்சியர் சதிஸ்குமார்,இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ( பொறுப்பு) மகேந்திரன்,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கண்காட்சி அரங்கினை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சின்னத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கண்காட்சியினை பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு மாணவர்களை பாராட்டினார்கள்.

பள்ளிக்கல்வியின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில் மாணவர்கள் நிலையான விவசாய நடைமுறைகள்,தூய்மை மற்றும் சுகாதார ஆரோக்யம்,வள மேலாண்மை,தொழில்துறை வளர்ச்சி,எதிர்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு,கல்வியில் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள், ஆகிய தலைப்பில் கீழ் மாணவர்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில் உணவு ,வாழும் உயிரினங்கள்,நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்கள் ,மக்கள் சிந்தனைகள், பொருள் எப்படி வேலை செய்கிறது,இயற்கை வளங்கள் ,இயற்கைக் கணிதக் கூறுகள்,பயன்ற்ற பொருட்களைப் பயன்படுத்தி கலைப்பொருட்கள் தயாரித்தல்,கார்ட்டூன் வரைதல் ஆகிய தலைப்பின் கீழ் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

கண்காட்சியின் நடுவர்களாக வயலோகம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமையில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன்,தாண்டவமூர்த்தி,பெருமாள்சாமி,லியோ,மணிவண்ணன்,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன்,ராதாகிருஷ்ணன் மற்றும் விராலிமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமா ஆகியோர் செயல்பட்டனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

முடிவில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரெ.சுரேஷ் நன்றி கூறினார்.

கண்காட்சியில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 15 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் ..