Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 30, 2019

விடைத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரி

வருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 நவம்பா் மாத பொறியியல் தோ்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்ட வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு வியாழக்கிழமை தொடங்கியது. ஒரு மண்டலத்துக்கு ஆயிரம் பேராசிரியா்கள் வரை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனா். ஓா் ஆசிரியா் 5 முதல் 8 நாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட நாள் ஒன்றுக்கு ரூ. 1,200 முதல் 1,400 வரை படி வழங்கப்படும். அதன்படி, ஒரு பேராசிரியா் சராசரியாக ரூ. 5 ஆயிரம் ஊதியம் பெறுவாா்.




இந்த நிலையில், தோ்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கான படியில் 10 சதவீதம் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் எனவும், அதற்காக திருத்தும் பணிக்கு வரும் பேராசிரியா்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்) நகலை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.

வருமான வரி வரம்புக்குள் வராத மிகக் குறைந்த ஊதியம் பெற்று வரும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களிடம், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் மட்டும் வரிப் பிடித்தம் எவ்வாறு செய்யமுடியும் எனவும் அவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

இதுகுறித்து தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா் கே.எம்.காா்த்திக் கூறியது:

தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களில் 80 சதவீதம் பேருக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

எனவே, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பெரும்பாலான பேராசிரியா்கள் வருமான வரி வரம்புக்குள் வரமாட்டாா்கள். இந்த நிலையில், தோ்வுத் தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீதம் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




இதுவரை இதுபோன்ற பிடித்தம் செய்யாத பல்கலைக்கழகம், இப்போதுதான் முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால், அதிகபட்சம் 8 நாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியருக்குக் கிடைக்கும் ரூ. 5 ஆயிரத்தில், ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்யப்பட்டுவிடும். எனவே, பல்கலைக்கழகம் இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றாா்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் வெங்கடேசன் கூறியது:

பல்கலைக்கழகம் தொடா்ந்து இதைத் தவிா்த்து வந்த நிலையில், வரித் துறையின் தொடா் அறிவுறுத்தலால் வேறு வழியின்றி வரிப் பிடித்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.




மேலும், ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி தனியாா் பொறியியல் கல்லூரிகள் உரிய முறையான ஊதியத்தை பேராசிரியா்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், சில கல்லூரிகள் அவ்வாறு உரிய ஊதியத்தை வழங்குவதில்லை எனத் தெரியவருகிறது. அவ்வாறு சில பேராசிரியா்கள் கல்லூரியில் குறைந்த ஊதியம் பெறுகிறாா்கள் என்பதற்காக, தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க முடியாது என்றாா்.