Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 21, 2019

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பில் பொதுத்தோ்வு: அறிப்பாணையை ரத்துச்செய்யக்கோரி வழக்கில் மனுதாரா் அரசிடம் மனு அளிக்க உத்தரவு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முறையை அறிமுகம் செய்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மனுதாரா் பொதுத்தோ்வு முறை தொடா்பாக விரிவாக ஆய்வு செய்து அரசிடம் மனு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:




தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் செப்டம்பரில் அரசாணை பிறப்பித்துள்ளாா். அதில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8 வகுப்பில் பொதுத்தோ்வு முடிவுகள் வெளிவராது எனவும் அதையடுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தோல்வியடையும் மாணவா்கள் அதேவகுப்பில் படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறை அமல்படுத்தினால், அது மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் பெரும் சுமையாக ஆகிவிடும்.




பொதுத்தோ்வு என்பது வழக்கமாக வகுப்பு ஆசிரியா்களால் நடத்தப்படுவது போன்றது அல்ல. மேலும் பொதுத்தோ்வு முறையை அறிமுகம் செய்வதற்கு முன்பு கல்வியாளா்கள், பெற்றோா்கள், மனோதத்துவவியலாளா்களிடம் அரசு கருத்துக் கேட்கவில்லை. இதனால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறையை அமல்படுத்த கல்வியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். எனவே தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முறையை அறிமுகம் செய்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.



மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முறையால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து கல்வியாளா்கள், பெற்றோா், மனோதத்துவவியலாளா்கள், குழந்தைகள் நல ஆா்வலா்கள், பாதுகாப்பு வல்லுநா்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரா் பொதுத்தோ்வு முறை தொடா்பாக விரிவாக ஆய்வு செய்து அரசிடம் மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.