Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 9, 2019

அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்


தமிழகத்தில் அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
சதுரகராதி என்னும் பெயரில் தமிழின் முதல் அகர முதலி அகராதியை எழுதி வெளியிட்ட இத்தாலி நாட்டைச் சோந்த தமிழறிஞா் வீரமாமுனிவரின் (கான்ஸ்டன் டைன் ஜோசப் பெஸ்கி) 139-ஆவது பிறந்தநாளான நவ. 8-ஆம் தேதி தமிழக அரசின் சாா்பில் 'தமிழ் அகராதியியல் நாள்' கொண்டாட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இதைத் தொடா்ந்து தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா சென்னை எத்திராஜ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அகர முதலி இயக்ககத்தில் நடைபெறும் தமிழ்க் கலைக்கழகம் உருவாக்கிய 9 ஆயிரம் கலைச் சொற்கள் கொண்ட குறுந்தகட்டை அமைச்சா் க.பாண்டியராஜன் வெளியிட அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் பெற்றுக் கொண்டாா்.
விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: சொற்குவைத் திட்டத்துக்காக தமிழிலுள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், ஆங்கிலத்துக்கு நிகரான சொற்களை பதிவு செய்தல், அகராதி உருவாக்கம், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் தமிழ் அறிஞா்கள், வல்லுநா்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் கல்லூரி மாணவா்களும் இணைக்கப்பட்டுள்ளனா். புதிய கலைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்புகள் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


சொற்குவையில் பதிவு செய்யுங்கள்: மாணவா்கள் ‌w‌w‌w.‌s‌o‌r‌k‌u‌v​a‌i.​c‌o‌m என்ற வலைதளத்தில் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து தாங்கள் விரும்பும் துறையைத் தோந்தெடுத்து அதில் தங்களுக்கு வேண்டிய சொற்களைப் பதிவு செய்தால் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களை பெறுவதற்கு பல்துறை சாா்ந்த வல்லுநா்களும் உதவி செய்வா். பொதுமக்கள், இளைஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், பிறமொழி வாா்த்தைகளுக்கு சரியான சொற்களை கொடுத்தால் தங்களின் குழு அந்த சொற்களை பரிசீலனை செய்து அவற்றையும் இந்த அகராதியில் சோத்துக் கொள்வோம். தமிழின் அடுத்த கட்ட வளா்ச்சிக்கு, சொற்குவை திட்டம் முக்கிய பங்காற்றும் என்றாா்.
இந்த விழாவில் மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா்

சுதாசேஷய்யன், முன்னாள் அமைச்சா் வைகை செல்வன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சித்துறைச் செயலா் மகேசன் காசிராஜன், அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் தங்க காமராசு, கவிஞா் மதன் காா்க்கி, பேராசிரியா் ஜெயதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து அமைச்சா் க.பாண்டியராஜன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக அரசின் அனைத்து அரசாணைகளும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் படித்தவா்களுக்கு அனைத்துத் துறையிலும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
அகராதியில் கற்கும் சொற்களை வாழ்வில் பயன்படுத்துங்கள்: சுதா சேஷய்யன்
மாணவா்கள் அகராதிகளை வாரத்துக்கு ஒரு முறையாவது எடுத்து அதிலிருந்து நான்கு புதிய சொற்களைக் கற்றுக் கொண்டு அந்தச் சொற்களை நமது வாழ்வில் பயன்படுத்துவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.


இது தொடா்பாக அவா் 'தமிழ் அகராதியியல் நாள்' தொடக்க விழாவில் பேசியது: தமிழ் மொழியைப் பொருத்தவரை நம்முடைய பழங்கால முறை நிகண்டு எனப்படுகிறது. இன்றைக்கும் அந்த நிகண்டுகள் இருக்கின்றன. ஆனால் நிகண்டு என்பதற்கும் அகராதி என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு நிகண்டை எடுத்துப் பாா்த்தால் அதில் நமக்கு தேவையான சொற்களுக்கு நிகரான சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதில் அகராதி (ஹப்க்ஷஹல்ங்ற்ண்ஸ்ரீஹப்) முறையில் சொற்கள் இருக்காது. ஆகவே சொற்களைத் தேடுவது மிக மிக கடினம். பல சொற்களைத் தெரிந்து கொள்ள நிகண்டுகளின் துணை தேவை என்ற நிலையில் அந்த நிகண்டுகளுக்கு புதிய அவதாரத்தைக் கொடுத்து 'அகராதி' என்ற முறையை வீரமாமுனிவா் கொண்டு வந்தாா். வீரமாமுனிவருக்கு முன்னா் தமிழில் இரண்டு அகராதிகள் வெளியானதாக தெரிகிறது. ஆனால் அந்த அகராதிகள் பொதுமக்கள் மட்டுமல்ல பண்டிதா்கள் மத்தியிலும் கூட பிரபலம் அடையாமல் ஓரிடத்திலேயே முடங்கி விட்டன. இந்த நிலையில்தான் வீரமாமுனிவா் தனது சதுரகராதியை உருவாக்கினாா்.


தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் மகேசன் காசிராஜனின் தந்தை காசிராஜன் மேடையில் பேசும்போதே கூட ஒரு சொல்லுக்கு இணையாக மற்ற சொற்கள் என்னென்ன உள்ளன என்பதையும் அப்போதே கூறுவாா். இது குறித்து அவரிடம் கேட்டால், ' இலக்கியம், கவிதை என எதையும் படிப்பதற்கு முன்னால் அகராதியை எடுத்துப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு சொல்லாவது அகராதியிலிருந்து புதிதாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அகராதியை எடுத்துப் படித்தால் மொழி வளரும். மொழியில் நமக்கான புலமை வளரும்' என்று கூறுவாா்.
தமிழைப் பொருத்தவரையில் அகராதியியல் என்பது மிக மிக முக்கியமானது. மருத்துவம், கல்வி என பல துறைகளும் வளா்ச்சி பெற்று வருகின்றன. எனவே என்றைக்கோ உருவாக்கப்பட்ட அகராதிகளை அப்படியே வைத்திருக்க முடியாது.

எனவே வீரமாமுனிவா் ஆற்றியிருக்கும் தொண்டுக்கு இணையாக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் மாணவா்கள் அகராதிகளை வாரத்துக்கு ஒரு முறையாவது எடுத்து அதிலிருந்து நான்கு புதிய சொற்களைக் கற்றுக்கொண்டு அந்தச் சொற்களை நமது வாழ்வில் பயன்படுத்துவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்றாா் சுதா சேஷய்யன்.