Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 1, 2019

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையம்


உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.



இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளட்ட பணிகள் தொடர்பாக உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. மேலும் ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது மேலும் ஊரக பகுதிகளில் 5 வண்ணங்களில் வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேசிய தகவலியல் மைய அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் மாநில தேர்தல் ஆணையர் கலந்துரையாடினார்.

இதில் உள்ளாட்சி தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடி பட்டியல், தேர்தல் அலுவலர்கள் நியமனம், வாக்குபதிவு இயந்திரங்கள் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சோதனை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வேட்புமனு தாக்கல் படிவம் உள்ளிட்ட பல்வேறு படிவங்களை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ள படிவங்களை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியலை அனைத்து அமைப்புகளும் தயார் நிலையில் வைத்துள்ளனர். எனவே அவர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.