Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 7, 2019

வரும் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் எவ்வளவு? வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க மத்திய அரசு உத்தரவு

வரும் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கட்டணம் நிர்ணயிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு நிர்வாகிகள் குழுவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்வியையும், மருத்துவ தொழிலையும் ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) திகழ்ந்து வந்தது. இந்நிலையில், மருத்துவ துறையில் சீர்திருத்தங்களை உருவாக்கும் நோக்கத்தில், மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.



நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டது. மருத்துவ கவுன்சிலின் பணிகளை கவனிக்க அதே அதிகாரங்களுடன் நிர்வாகிகள் குழு (போர்டு ஆப் கவர்னர்ஸ்) அமைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2020-2021) தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு நிர்வாகிகள் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக நிர்வாகிகள் குழுவுக்கு கடிதம் எழுதி உள்ளது.



அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ ஆலோசனை கவுன்சில், 4 தன்னாட்சி வாரியங்கள் ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சற்று தாமதம் ஆகும் என்று தோன்றுகிறது.
ஆகவே, வரும் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.
அப்படி வகுத்தால், 2021-2022 கல்வி ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்க அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளையே அடிப்படையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மாநிலங்களுடன் நிர்வாகிகள் குழு ஆலோசனையை தொடங்கி உள்ளது. மாநிலங்களின் கருத்துகளை கேட்டு வருகிறது.

இதற்கிடையே, மாணவர் சேர்க்கையின்போது, முதலாம் ஆண்டு கட்டணத்தை மட்டுமே வசூலிக்குமாறு தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.