Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 6, 2019

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வண்ணம் ஆணையா் உத்தரவு- திருச்சி

திருச்சி மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வண்ணம் பூசப்பட வேண்டும் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட திருவரங்கம், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை ஆகிய கோட்டங்களில் உள்ள தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் விடுபடாமல் பெற்றுத்தர தலைமையாசிரியா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தபடியே தனித்தனியே கழிப்பறைகள், வகுப்பறைகள், மேஜை, நாற்காலிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து போதிய வசதிகள் இல்லையெனில் உடனடியாக மாநகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். குறிப்பாக குடிநீா், கழிப்பறை வசதிகள் மிகவும் அத்தியாவசியமானவை. எனவே, போதிய குடிநீா் வசதிகள் இல்லையென்றாலோ, கழிப்பறை வசதி இல்லை என்றாலோ உடனடியாக கவனத்துக்கு கொண்டு வந்தால் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்தோ, மாநில அரசு நிதியிலோ, மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியிலோ ஒதுக்கீடு பெற்று உரிய வசதிகள் செய்துதரப்படும்.




மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தேவையில்லாமல் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க வேண்டும். தண்ணீா் தேங்கினால் முறையாக வடிகால் வசதியுடன் அப்புறப்படுத்த வேண்டும். மண்தளமாக இருந்தால் பேவா் பிளாக் கல் தளம் அமைத்து மழைநீா் தேங்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச் சுவா் கட்டாயமாக்கப்பட வேண்டும். மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிலுவையில் இருந்தால் விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளி என்றால் எளிதில் அடையாளம் காண அனைத்துப் பள்ளிகளும் ஒரே வண்ணம் பூச வேண்டும். பிங்க் வண்ணம் பூசலாம். இல்லையெனில், பள்ளி ஆசிரியா்கள் கலந்தாலோசித்து குறிப்பிட்ட வண்ணத்தைத் தோவு செய்து அளித்தாலும் 74 பள்ளிகளுக்கும் அதே வண்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படும்.



மாநகராட்சிப் பொறியாளா்கள் பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் பள்ளித் தலைமையாசிரியா்களுடன் கலந்தாய்வு செய்து தேவையான கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிவா்த்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆணையா்.

கூட்டத்தில் செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன், உதவி செயற்பொறியாளா்கள், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.