Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 14, 2020

போகி பண்டிகையின் வரலாறு


போகி என்றாலே நினைவு வருவது விடுமுறை கிடைக்குமா கிடைக்காத என்பது தான். போகி என்றால் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பழையவற்றை தீயில் போட வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், நாம் ஏன் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறியாத ஒன்று. போகி பண்டிகையான இன்று போகியின் வரலாற்றை இங்கு பார்க்கலாம்.




போகியின் வரலாறு
சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாடு, வடமாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.

போகியன்று, வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ மற்றும் ஆவாரம் பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கி இருந்த குப்பைகள், தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.




பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துவார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் அழகாக இருக்கும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை சமைத்து கடவுளுக்கு படையலிடுவார்கள். மேலும் சிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்து வழிபடுவார்கள்.




போகி பண்டிகையன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாள் புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.