Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 20, 2020

தேர்வுகள் முதற்படி. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! மோடி அறிவுரை!


தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்ற `தேர்வுக்கு பயம் ஏன்?' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 66 தமிழக மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 2,000 மாணவர்கள் கலந்துகொண்டு மோடியுடன் கலந்துரையாடினர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் மோடி மாணவர்களிடம், 'உங்கள் நண்பர்களிடம் நீங்கள் பேசுவதைப்போல என்னிடம் பேச வேண்டும். மிக எளிதான ஒரு சூழலில் நாம் இன்று பேசப்போகிறோம். நாம் ஒருவேளை தவறு செய்யலாம். குறிப்பாக என்னுடைய விஷயத்தில், நான் ஏதேனும் தவறுகளைச் செய்தால் ஊடக நண்பர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்' என்று கேலியான தொனியில் பேசத் தொடங்கினார்.




தொடர்ந்து பேசிய அவர், `ஒரு பிரதமராக, நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் புதுமையான அனுவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். ஆனால், யாரேனும் என்னிடம்உங்கள் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி எது?' என்று கேட்டால், இந்த நிகழ்ச்சியைத்தான் சொல்லுவேன்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். நமது நாட்டிலுள்ள இளைஞர்களின் எண்ணைத்தையும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்' என்றார்.

மேலும், 'மாணவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது. வாழ்க்கையின் ஒருபகுதியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரயான் அனுப்பும் திட்டத்தில் வெற்றி என்பது உத்தரவாதம் இல்லை என்பதால் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று என்னிடம் பலரும் கூறினர். ஆனால், நான் அங்கு இருக்க வேண்டிய தேவை உள்ளது. நான் கலந்துகொண்டு விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினேன்.




உலகம் இன்று நிறைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை. தேர்வுகளை முக்கியப் படியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, வாழ்க்கையாக நினைக்கக்கூடாது' என்று பேசினார்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்தும் மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். அதில், 'நம்முடைய கிரிக்கெட் அணி அந்தத் தொடரில் பின்னடைவுகளைச் சந்தித்தது. இந்த நிலைமையில் ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் செய்ததை நம்மால் மறக்க முடியுமா? போட்டியையே மாற்றி விட்டார்கள். இதேபோல, காயம் ஏற்பட்டபோதும் அணில் கும்ப்ளே பந்து வீசியதையும் மறக்க முடியாது' என்று குறிப்பிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து, மாணவர்களின் கேள்விக்கும் தனது பதில்களை அளித்தார். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணைப் பெற ஒருவர் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்" என்று உத்தரகாண்டைச் சேர்ந்த மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோடி,மாணவர்களைச் சுற்றி `மதிப்பெண்தான் முக்கியம்' என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.




பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். மதிப்பெண்தான் எல்லாமே என்று மாணவர்களிடம் சொல்லக் கூடாது' என்று கூறினார்.

தனித்திறன்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தனித்திறன்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஒருவரை ரோபோவைப்போல மாற்றிவிடும். நேரத்தைத் திட்டமிட்டு, தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்' என்று பதிலளித்தார்.




தொழில்நுட்பங்களை மாணவர்கள் நண்பர்களாகக் கருத வேண்டும். தொழில்நுட்பங்கள் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது. தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள மாணவர்கள் தினமும் ஒருமணி நேரத்தைச் செலவிட வேண்டும். சமூகத்துடன் இணைந்திருப்பது அவசியமானது. ஆனால், சமூக வலைதளங்கள் சமூகங்களுடன் இணைந்திருப்பதற்குத் தடையாக உள்ளது' என்று மாணவர்களின் தொழில்நுட்பம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.