Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 19, 2020

பரிபாடலில் திருமால் பெருமை

எட்டுத்தொகை நூல்களுள் அகம் - புறம் பற்றிப் பாடுவது பரிபாடல். இது செவ்வேள், திருமால், வையை என்னும் மூன்று பிரிவுகளில் சங்கத் தமிழரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவற்றுள் திருமாலின் தோற்றப் பொலிவையும், அவதாரச் சிறப்பையும் காண்போம்.

திருமாலில் பெருமைகள்

பரிபாடல் தொடர்கள் வேகமும் சுவையும் நிறைந்தவை. உலக இயக்கம் அனைத்திற்கும் முழுமுதற் காரணம் திருமால். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற வாக்கிற்குச் சொந்தக்காரன் திருமால். திருமாலைப் பற்றிய வழிபாட்டுப் பாடல் இது.

தீயுனுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ (பரி.3: 63-68)

திருமாலின் தோற்றப் பொலிவு - திருமுடி : ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடன் பார்ப்பவரை அச்சம் தரும் வகையில் திருமாலின் தலைக்குத் துன்பம் வராது காக்கின்றது. கதிரொளி படர்ந்த மலை போன்றும், வேங்கை மலர்ந்த குன்றம் போன்றும் திருமாலின் பொன்முடி அழகுடன் மிளிர்கின்றது. இதனை, ""ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர'' (பரி.1:1-2) என்றும், திருமாலின் திருக்கண்கள் எப்பொழுதும் இயல்பாகவே சிவந்திருத்தலின் இவர் கண்கள் செறா அச் செங்கண்(பரி.13:57-58) என்றும், தீர் செங்கண் (பரி. 4. 10-11) என்றும் திருக்கண்களைக் கூறுகிறது.

திருவாய்: திருமாலின் திருவாய் இயல்பிலேயே சிவந்த நிறமுடைய தாமரை போன்று காணப்படுகிறது. இதை,

""அடைஇறந்து அவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை

அடியும் கையும் கண்ணும் வாயும்'' (பரி.13:50-51) என்னும் வரிகள் மூலம் அறியலாம்.

திருத்தோளும் திருக்கழுத்தும் : ஆதிசேடனாகிய பாம்பு திருமாலுக்குப் பாம்பனையாக மட்டுமில்லாது அவருடைய கழுத்தினை அலங்கரிக்கும் அணிகலன்களாலும் பகைவரை அச்சம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி நிழல் தரும் குடையாகவும் உள்ளது என்பதை,

""பாம்பு தொடி பாம்பு முடி மேலன
பாம்பு பூண் பாம்பு தலை மேலது'' (பரி.4:44-45)

என்ற வரிகளில் விளக்குகின்றன. மேலும், அவருடைய வெண்கொற்றக் குடை (3:74), திருக்கை (2:36-51), திருமார்பின் அழுகு (1:36), (1:3), (4:59), திரு உந்தி (பரி.3:93-94) திருவடி (3:2) திருமேனி நிறம் (2:52) திருமாலுக்குரிய கருடக் கொடி (4:36-41), படுக்கை (4:42), திருமால், கண்ணனாக ஆயர்பாடியில் ஆய்ச்சியரோடு ஆடிய குரவைக்கூத்து, பின்னாளில் குடக்கூத்து (3:83-85) எனப்பட்டது போன்ற திருமாலின் பெருமைகள் பலவற்றையும் இப்பாடல்கள் மூலம் அறியலாம்.

விரும்பு - வெறுப்பு அற்றவன் : திருமால் உலகிலுள்ள அனைத்துப் பொருளின் வடிவமாகத் திகழ்கிறான். திருமாலுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையில்லை. தன்னைப் போற்றும் பிரகலாதனுக்கு வேண்டியவராகவும், தன்னை எதிரியாகக் காணும் இரணியனுக்கு வேண்டாதவராகவும் அவரவர் எண்ணத்திற்கு ஏற்றாற்போல இறைவன் விளங்குகின்றான் (பரி.4:49-51) என்பதையும், திருமால் தன்னை விரும்பும் அடியார்களிடம் எவ்வாறு தன் அருளைச் செலுத்துகிறானோ அதைப் போலவே தம்மை இகழ்வாரையும் பொறுத்து அருள் செய்யும் குணமுடையவன் என்பதையும்(பரி.2:54) அறியமுடிகிறது.

திருமாலின் அவதாரங்கள் : பத்து அவதாரங்களை திருமால் எடுத்ததாக நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கூறுகிறது. ஆனால், வராக (பரி.4:22-24), நரசிங்க (பரி.4:19-21), கண்ணன் (பரி.3:83) கூர்மம் (பரி.1:64-66), வாமனம் (பரி.3:20) ஆகிய ஐந்து அவதாரங்களை மட்டுமே எடுத்ததாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது.

பரிபாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமாலின் தோற்றப் பொலிவும் அவதாரங்களும் திருமாலின் பெருமையைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளன. தொல்காப்பியர் காலத்தில் முல்லைத் திணைத் தெய்வமாக மட்டும் விளங்கிய திருமால், பரிபாடல் காலத்தில் எல்லா மக்களாலும் வழிபடப்பெற்று திணை கடந்த தெய்வமானார் என்பதை அறியமுடிகிறது.