Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 23, 2020

எந்த படிப்பில் ஆர்வம்? அறிய பள்ளிகளில் 'ஆன்லைன்' தேர்வு ... 'நெட்வொர்க்' வேகம் தருகிறதே 'நோவு


கோவை : தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் எந்த படிப்பில் ஆர்வமுள்ளது என்பதை அறிய, 'நாட்டமறிதல் தேர்வு' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் இத்தேர்வை நடத்த, பள்ளிகளில் உள்ள 'நத்தை வேக' இணையதள வேகம் குறுக்கே நிற்கிறது. ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் இத்தேர்வில், மொழிப்பாட அறிவு, கணிதம், அறிவியல், தர்க்க சிந்தனை உள்ளிட்ட, ஆறு தலைப்புகளில், 90 வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவுக்கு ஒரு நிமிடம் என்ற ரீதியில், 90 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படும்.



அனைத்து பள்ளிகளிலும், மூன்று நாட்கள் காலை, மதியம் என இருவேளைகள், ஒரு அமர்வுக்கு அதிகபட்சம், 15 பேர் வரை தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு, இணையதள வேகம், குறைந்தபட்சம் 5 mbps இருக்க வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், 3 mbpsக்கும் குறைவாகவே வேகம் இருப்பதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய நெட்வொர்க் அலுவலகத்தை அணுகி, தேர்வு சமயத்தில் இணையதள வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதள வேகத்தை அதிகரிக்காமல் தேர்வு நடத்தினால், குளறுபடிகள் ஏற்படும் என்பதால், தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் நீடிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.




அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நாட்டமறிதல் தேர்வுக்கு, www.tntp.org என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட, வினாத்தாள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதள வேகம் குறைவாக இருக்கிறது. தேர்வு நடைபெறும் நாட்களில், இணையதள வேகத்தை அதிகரிக்க, நெட்வொர்க் அலுவலகத்திலும், மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க, மின்வாரிய அலுவலகத்திலும், தலைமையாசிரியர்கள் கடிதம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர். கல்வித்துறையை பொறுத்த வரையில், திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கு மட்டும் குறைச்சல் இல்லை. 'நீட்' பயிற்சி போல், திட்டத்தை அமல்படுத்துவதில்தான் தரிகிணதோம்!