Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 13, 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு எதிரொலி; வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் கடும் கட்டுப்பாடு


டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வெளியாகி பலரும் கைதாகி வரும் நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை என எச்சரித்துள்ளது.




சமீத்தில் வெளியான குரூப்-4 தேர்வு முடிவில், முறைகேட்டில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித் தேர்வு நடக்க உள்ளது. இதில் தேர்வு வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு வரும் 14 ,15, 16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலையில் தமிழ்நாடு முழுவதும் 57 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை 24 ஆயிரத்து 420 ஆண் தேர்வர்கள், 40 ஆயிரத்து 266 பெண் தேர்வர்கள், 22 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தேர்வர்கள் என சுமார் 64 ஆயிரத்து 710 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.




இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யும்போதே அதில் பல நிபந்தனைகளை தேர்வு வாரியம் விதித்துள்ளது. நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யும்முன், தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது விதிமுறைகளை மீறினாலோ ஆசிரியர் தேர்வு வாரியம் என் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும், தேர்வு எழுதுவதற்குத் தடை விதிப்பதற்கும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 24 கட்டளைகளை நான் ஏற்றுக்கொண்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பெறுவதற்கு சம்மதிக்கிறேன் என உறுதிமொழி அளித்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டில் தேர்வர்களுக்கான நிபந்தனைகள்




*ஆன்லைன் மூலம் மட்டும் பதிவிறக்கம் செய்யப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தவறுகள் இருந்தால், உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர், செயலாளரைத் தொடர்பு கொண்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு எந்தவிதமான வேலைவாய்ப்பிற்கும் உத்தரவாதமாகாது.

*தேர்வு நடைபெறும் மாவட்டம், தேர்வு மையம் உள்ளிட்டவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடப்புக் கொள்கையின் அடிப்படையில் ரேண்டம் முறையில் ரகசியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையம் மாற்றம் செய்து அளிக்கப்படாது.

*தேர்வு மையத்திற்குள் ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொண்டுவரவேண்டும்.




அந்தப் புகைப்படம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்துடன் கண்டிப்பாக ஒத்துவரவேண்டும். அவ்வாறு புகைப்படம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

* தேர்வர்கள் அடையாளத்துக்காக தங்களுடன் வாக்களர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாவிட்டால், கண்டிப்பாக தேர்வெழுத அனுமதிக்கப் படாமாட்டார்கள்.

* காவல்துறையினர் அல்லது பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* தேர்வு மையத்தில் நகைக்கு அனுமதி கிடையாது. தேர்வு மையத்திற்குள் செல்போன், உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள், கால்குலேட்டர், டிஜிட்டல் டைரி, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.




* தேர்வு மையத்திற்குள் வளையல், கம்மல், கொலுசு உள்ளிட்ட நகைகள், வாட்ச், பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ் செருப்பு போன்றவை அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்தவிதமான பொருட்களும் அனுமதிக்கப்படாது.

* பேப்பர், பேனாவிற்கும் அனுமதி கிடையாது. தேர்வு மையத்தில் தேர்வுகள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு தேவையான பேப்பர் மற்றும் பேனா அல்லது பென்சில் தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். அதனைப் பயன்படுத்திவிட்டு மீண்டும் தேர்வு மையத்தின் அதிகாரியிடம் அளிக்க வேண்டும், வெளியே எடுத்துச் செல்லக்கூடாது.




* தேர்வு மையத்தில் தேர்வர்கள் வேறு தேர்வர்களுடன் பேசுவது போன்ற எந்தவிதமான செயலிலும் ஈடுபடக் கூடாது. தேர்வு நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டும்.

* வெளிநபர்கள் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது.

* தேர்வு விதிமுறைகளை மீறும் தேர்வர்கள் தேர்வினை எழுதுவதில் இருந்து தகுதி நீக்கப்படுவார்கள். தேர்வர்கள் 3 மணி நேரம் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.




* தேர்வில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வந்தால், அதுகுறித்து ஆய்வு செய்து மறு தேர்வு வைக்கும் உரிமை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உள்ளது.

* சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ தேர்வினை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு தேர்வு வாரிய நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.