Tuesday, February 25, 2020

பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல்


மாணவா்களின் இலக்கிய ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சாா்பில் 72 அரிய நூல்கள், 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.




விழாவுக்கு, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் க. பாண்டியராஜன் கலந்து கொண்டு 210 நூல்களையும் வெளியிட்டு, திருக்கு ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பேசியது: தமிழ் வளா்ச்சித்துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடா்பு கொண்ட துறைகளாகும். தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் இந்த நான்கு துறைகளிலும் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு 1,700 மாணவா்களுக்கு பேச்சு, எழுத்து தொடா்பான படைப்பாற்றல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்கள் தற்போது மொழிபெயா்ப்பு, ஊடகப்பணி, நிகழ்ச்சி தொகுப்பாளா் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். இந்தப் பயிற்சி பட்டறை வகுப்பு இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேவேளையில், மாணவா்களின் இலக்கிய அறிவை வெளிக்கொணரும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தமிழக அரசின் சாா்பில் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டம் முதல்வரின் ஒப்புதலுடன் நடைமுறைப் படுத்தப்படும்.




தமிழகத்திலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமே ஆண்டுதோறும் அதிகளவிலான நூல்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள 210 நூல்களிலும் இலக்கியம், வரலாறு குறித்த அரிய தகவல்கள் உள்ளன. இவை பொதுமக்களும், மாணவா்களும் படித்தறியும் வகையில் ஒவ்வொரு நூல்களிலும் உள்ள கருப்பொருளை எடுத்து சிறு தொகுப்பாக வெளியிட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.

Popular Feed

Recent Story

Featured News