Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 10, 2020

டி.என்.பி.எஸ்.சி., முறைகேட்டை தடுக்க விடைத்தாள் பாதுகாப்பில் மாற்றம்


சென்னை : 'அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுக்கு காரணமான, விடைத்தாள் திருத்தம் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப் - 2 ஏ' தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், டி.என்.பி.எஸ்.சி., மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளன.



போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவோர், அரசு வேலைகளிலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் மீதும், ஆர்வம் குறைந்து காணப்படுகின்றனர்.தேர்வர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என, தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். முறைகேடுகளை தடுக்க, கடும் நடவடிக்கைகளை, டி.என்.பி.எஸ்.சி., எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது. தேர்வர்களை மட்டும் கட்டுப்படுத்தும், கூடுதல் கெடுபிடிகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஆனால், முறைகேட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.



தேர்வு மையங்களில், கண்காணிப்பு பணி முறையை மாற்றுதல், தேர்வு பணிக்கான ஊழியர் நியமனத்தில் பாரபட்சமற்ற தன்மை, விடைத்தாள் திருத்த பணிகளில் மாற்றம், விடைத்தாளின் உண்மை தன்மையை சோதனை செய்வது போன்ற நடைமுறைகள், அறிமுகம் செய்யப்படவில்லை. இடைத்தரகர்களிடம் சிக்காமல், விடைத்தாளை எடுத்து வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்; அழியும் மை போன்றவற்றை தேர்வர்கள் பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை இல்லை.இவ்வாறு, சிறப்பு கவனம் செலுத்தப்படாதது, தேர்வாணையத்தின் மீது, மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது என, தேர்வர்கள் கூறுகின்றனர்.



எனவே, விண்ணப்பதாரர்களிடம் அதிக தகவல்களை பெறுவதில் காட்டும் அக்கறையை, தேர்வில் முறைகேடு இன்றி, விடைத்தாள் திருத்தம், முடிவுகள் வெளியிடுதல், நேர்முக தேர்வுக்கான குழுவில் நியாயமானவர்களை நியமித்தல் போன்றவற்றிலும், தேர்வாணையம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.